பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு பிறகு, தமிழ்நாட்டில் திமுகவுடனான அதன் கூட்டணி சமன்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து திமுகவை நெருக்க காங்கிரஸ் முயல்வதாக கூறப்படுவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இருப்பினும், தமிழ்நாட்டின் அரசியல் கள யதார்த்தங்கள், ‘பீகார் வேறு, தமிழ்நாடு வேறு’ என்ற கூற்றை உறுதிப்படுத்துகின்றன. காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை என்றும், இதன் விளைவாக விஜய்க்கு அதிமுக கூட்டணி மட்டுமே பிரதான வாய்ப்பாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, ஒரு மாநில தேர்தலில் தோல்வியடைவது என்பது நாடு தழுவிய அதன் கூட்டணியை தீர்மானிக்காது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் உறவுகள் மிகவும் ஆழமானவை. தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. திமுக இல்லாமல் காங்கிரஸ் கட்சி டெபாசிட் பெறுவதே கடினம். அதேபோல, சிறுபான்மையர் வாக்குகளை மொத்தமாக வைத்துள்ள காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு அவசியம். இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை” என்பது போல, இந்த உறவு இரு கட்சிகளுக்கும் தேவை.
தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து போராடுவதில், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உள்ள திமுகவின் 32 எம்.பி.க்கள் காங்கிரஸுக்கு பெரும் பலம். ஒரு மாநில தேர்தலுக்காக, இந்த கொள்கை ரீதியிலான வலுவான கூட்டணியை, அதுவும் தொடர்ந்து வெற்றியை கொடுத்து வரும் ஒரு கூட்டணியை, காங்கிரஸ் தலைமை முறித்து கொள்ளாது.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கான வாய்ப்பு 99.99 விழுக்காடு இல்லை. விஜய்யுடன் கூட்டணி பேச்சு நடத்துவது என்பது திமுகவிடம் அதிக இடங்களை பெறுவதற்கான ஒரு பேரம் பேசும் உத்தி அவ்வளவுதான்,” என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக நீடிக்கும்பட்சத்தில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு உள்ள முக்கிய அரசியல் வாய்ப்புகள் சுருங்கிவிடும். எனவே, விஜய்க்கு பெரிய அளவிலான அரசியல் அங்கம் வகிக்க கிடைக்கும் ஒரே பிரதான வாய்ப்பு அதிமுக தலைமையிலான கூட்டணிதான். அதிமுக – பாஜக கூட்டணியின் எதிர்காலம் குறித்த குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், அந்த அணியில் விஜய் இணைவது, கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளை பலப்படுத்தும்.
விஜய்யின் தனிப்பட்ட அரசியல் பலம் இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் ஒரு வலுவான கூட்டணியின் கீழ் செயல்படுவது மட்டுமே, அவர் தனது ஆரம்பக்கால அரசியல் இலக்குகளை அடைய உதவும். விஜய் தனித்து போட்டியிடுவது அல்லது வலுவான கூட்டணியில் இணையாமல் இருப்பது என்பது கடந்த காலங்களில் தமிழக தலைவர்கள் சந்தித்த அதே நிலையை அவருக்கு ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் உள்ளது.
விஜயகாந்த் ஆரம்பத்தில் தனித்து நின்று வாக்கு வங்கியை உருவாக்கினார். பின்னர் வலுவான கூட்டணியில் இருந்தபோது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.
கமல்ஹாசன் ஆரம்பத்தில் தனது தனிப்பட்ட செல்வாக்கை நம்பி அரசியல் செய்த அவர், மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிகளை பெறவில்லை. இறுதியாக, அவர் ஒரு வலுவான கூட்டணியின் அவசியம் குறித்து உணர்ந்து, 2024 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
விஜய்யின் அரசியல் நிலை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. ரசிகர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு இருந்தாலும், அது தேர்தல் வெற்றியாக மாறுவதற்கு ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பு மற்றும் சரியான கூட்டணி அங்கம் அவசியம். தனித்து போட்டியிடுவதால், வாக்குகள் சிதறுவதை தவிர வேறு எந்த பெரிய தாக்கத்தையும் அவர் உடனடியாக ஏற்படுத்த முடியாமல் போகலாம்.
மொத்தத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதன் சிக்கல்கள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் அரசியல் யதார்த்தத்தின் காரணமாக தொடர்ந்து நீடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம், விஜய்யின் ‘கூட்டணி அஸ்திரம்’ திமுகவுக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்க போவதில்லை என்பதால், தனது முதல் தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜய், அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து தீவிரமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
