பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியானது, தமிழ்நாட்டில் திமுகவுடனான அதன் கூட்டணி சமன்பாடுகளை முற்றிலுமாக மாற்றிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய்யின் தமிழக வெற்றி கழகம் உடனான கூட்டணி பேச்சுக்களை கசியவிட்டு, திமுகவிடம் அதிக இடங்களை பெற இனிமேல் காங்கிரஸ் மிரட்ட முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. பிகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, திமுக கொடுப்பதை பெற்றுக்கொண்டு கூட்டணியை தக்கவைத்து கொள்வதே காங்கிரஸுக்கு இப்போதைய புத்திசாலித்தனம் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை என்றாலே, அது இரு கட்சிகளின் பேரம் பேசும் வலிமையை பொறுத்தே தீர்மானிக்கப்படும். இந்த வலிமை பெரும்பாலும் முந்தைய தேர்தல்களின் முடிவுகளையே சார்ந்துள்ளது.
பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இது தேசிய அளவில் அதன் செல்வாக்கை கேள்விக் குறியாக்கியுள்ளது. இந்த தோல்வியானது, தமிழ்நாட்டில் திமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவதற்கான காங்கிரஸின் பேரம் பேசும் வலிமையைக் கணிசமாகப் பாதித்துள்ளது.
முன்பு, விஜய்யுடன் காங்கிரஸ் பேசுவதாக செய்திகள் வெளியானபோது, திமுக பதிலடி கொடுக்கும் அல்லது பதற்றமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிகார் தோல்விக்கு பிறகு, திமுக தலைமை இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது, “போனால் போகட்டும்” என்ற மனநிலைக்கு வந்துவிட்டதையே காட்டுகிறது. காங்கிரஸ், விஜய்யுடன் கூட்டணிக்கு சென்றாலும், அது திமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்ற எண்ணம் திமுகவுக்குள் எழுந்துள்ளது.
காங்கிரஸ் தரப்பு, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சித்தது. இதன் நோக்கம், திமுகவை நெருக்கி அதிக இடங்களை பெறுவதே. ஆனால், இந்த முயற்சி எதிர்பார்த்த பலனை தரவில்லை.
த.வெ.க. தலைவர் விஜய்யே காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்வது குறித்து இன்னும் உறுதியான முடிவெடுக்கவில்லை என்றே தெரிகிறது. ஒரு தேசிய கட்சியான காங்கிரஸ், மாநில தேர்தலில் வெறும் ஐந்து அல்லது பத்து இடங்களுக்காக விஜய்யின் ஆதரவை தேடுவது என்பது, காங்கிரஸின் பலவீனத்தையே காட்டுகிறது. இந்த சூழலில், தனது முதல் தேர்தலை சந்திக்கும் விஜய், உடனடியாக ஒரு தேசிய கூட்டணியில் ஜூனியர் பார்ட்னராக இணைவதை காட்டிலும், தனித்து போட்டியிடவே விரும்புவதாக த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசியலில், குறிப்பாக நாடாளுமன்றத்தில், மோடி மற்றும் பாஜகவை எதிர்ப்பதில் திமுக ஒரு நம்பகமான மற்றும் வலுவான கூட்டாளியாக உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என மொத்தம் 32 எம்.பி.க்களை கொண்டுள்ள திமுகவை, சில சட்டமன்ற தொகுதிகளுக்காக காங்கிரஸ் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
“விஜய்யை ஒரு மிரட்டல் உத்தியாக பயன்படுத்தும் காலம் முடிந்துவிட்டது. திமுகவை பொறுத்தவரை, விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும், அது அதிமுக வாக்குகளையே அதிகமாக பிரிக்கும் என்று நம்புகிறது. எனவே, இந்த சூழ்ச்சியால் திமுகவுக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை,” என்கிறார் ஒரு மூத்த அரசியல் விமர்சகர்.
1971-ல், இந்திரா காந்தி மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளையும் திமுகா=வுக்கு விட்டுக்கொடுத்து, வெறும் 10 மக்களவை தொகுதிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு சரணடைந்தார். அதுவே தமிழகத்தில் காங்கிரஸின் அழிவுக்கு வித்திட்டது.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021-ல் மீண்டும் வரலாறு திரும்பியது. அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸுக்கு வெறும் 25 இடங்களை மட்டுமே கொடுத்தார். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. வரலாற்றிலேயே மிக குறைந்த இடங்களைப் பெற்றபோதிலும், தமிழ்நாட்டின் வெற்றி தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு ஆறுதல் அளித்தது.
பிகார் தோல்வி, இந்திரா காந்தி மற்றும் காமராஜர் காலத்தை போல மீண்டும் தமிழகத்தில் தனிப்பெரும் பலத்துடன் களம் காணும் கனவுகளை காங்கிரஸுக்கு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
தற்போதுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்பது காங்கிரஸுக்கு தற்கொலைக்கு சமமானதாகும். எனவே, திமுக இந்த முறை 25க்கும் குறைவான இடங்களையோ அல்லது அதே 25 இடங்களையோ கொடுத்தாலும், அதை பெற்றுக்கொண்டு கூட்டணியை தொடர்வதே காங்கிரஸுக்கு இப்போதைய புத்திசாலித்தனம்.
ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு ஸ்டாலின் உடன் இருக்கும் வலுவான புரிதலை, பிரியங்கா காந்தி அல்லது வேறு சில உள்ளூர் தலைவர்கள் விஜய்யுடன் பேசுவதாக எழுப்பும் சலசலப்புகள் மாற்றாது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே, தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுகவை இழக்க விரும்பாத நிலையில், திமுக இப்போது ‘விஜய் அஸ்திரம்’ போன்ற மிரட்டல்களுக்கு அஞ்ச போவதில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
