தமிழக அரசியலில் பாஜகவின் அண்மைய முடிவுகள், கட்சிக்குள்ளும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளன. தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டதும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், பாஜகவை அதன் எதிரியாக பார்ப்பதும், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த காலகட்டத்தை பலரும் கட்சியின் திருப்புமுனையாக பார்க்கின்றனர். பல ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் நோட்டாவுக்கும் (கீழேயே இருந்தது. ஆனால், அண்ணாமலை தனது ஆக்ரோஷமான பிரசாரம், சமூக ஊடகங்களில் அவரது அணுகுமுறை மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றின் மூலம், பாஜகவை ஒரு கௌரவமான வாக்கு சதவீதத்தை எட்ட செய்தார். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் பாஜகவின் முகம் வலுப்பெற்றது.
அண்ணாமலை தலைவராக பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே முக்கிய காரணமாகக் கூறப்பட்டாலும், அவரது உண்மையான திறமைக்கும் உழைப்புக்கும் மதிப்பளிக்காமல், சில மூத்த தலைவர்களின் அழுத்தத்தின் பேரில் தலைமை இந்த முடிவை எடுத்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது, அவரை நம்பியிருந்த அவரது தீவிர ஆதரவாளர்களையும், குறிப்பாக சமூக ஊடகங்களில் பாஜகவுக்காக பணியாற்றி வந்த இளைஞர் படையையும் ஓரங்கட்டுவதற்கு சமம். இதனால், பாஜக மீது மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இது, பாஜகவின் வாக்கு சதவீதத்தை மீண்டும் நோட்டாவுக்கு கீழ் செல்ல வேண்டிய நிலைக்கே தள்ளும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரனை வைத்து கட்சியை எப்படி வளர்க்க முடியும் என்ற கேள்வி தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அண்ணாமலையின் வீரியமிக்க செயல்பாடுகளுக்கு பின், புதிய தலைமையின் மெதுவான அணுகுமுறை கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக அண்ணாமலை நீக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இந்த குழப்பத்தை பாஜக தலைமை கையாண்ட விதம் குறித்து அரசியல் விமர்சகர்கள் முக்கிய கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். பாஜக தலைமை இரண்டு விஷயங்களில் ஒன்றை செய்திருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்: ஒன்று, அண்ணாமலையையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சமாதானப்படுத்தி, இருவரையும் இணைந்து செயல்பட வைத்திருக்க வேண்டும். அல்லது, அண்ணாமலை தலைமையில், அதிமுகவை சாராத பிற கட்சிகள் கொண்ட ஒரு தனி அணியை அமைத்திருக்க வேண்டும்.
இந்த இரண்டையும் செய்யாமல், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையை பலிகொடுத்தது ஒரு மிகப்பெரிய தவறாக கருதப்படுகிறது. இது, ஒரு பக்கம் அண்ணாமலை ஆதரவாளர்களை புறக்கணிப்பதுடன், மறுபுறம் கூட்டணியில் இருக்கும் அதிமுகவிடமும் முழுமையாக நம்பிக்கையைப் பெறவில்லை என்ற தோற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவிலும், பாஜகவின் அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே தவறாக இருந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்திலேயே தமிழக பாஜக தலைவர்கள் சிலர், விஜய்யை மத ரீதியாக சுட்டிக்காட்டி ‘ஜோசப் விஜய்’ என்று கூறி வெறுப்பேற்றினர். இதனால், விஜய்க்கு பாஜக மீது ஒரு ஆழமான வெறுப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. அந்த வெறுப்புணர்வை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்பதைப்போல், விஜய் தனது கட்சியின் கொள்கை எதிரியாக பாஜகதான் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை தவிர்க்கும் வகையில் அவரது அறிக்கைகள் உள்ளன.
2026 தேர்தலில் விஜய்யை பாஜக கூட்டணியில் கொண்டு வருவது என்பது கிட்டத்தட்ட நடக்காத ஒன்று என்று உறுதியாகிவிட்டதாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில் சரியான அணுகுமுறையை கையாண்டிருந்தால், அவர் தேசிய கட்சிக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், தவறான ஆரம்பமே இந்த வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டதாக கருதப்படுகிறது.
அரசியல் கணிப்பாளர்களின் கூற்றுப்படி, அண்ணாமலை நீக்கமும், விஜய்யின் உறுதியான எதிர்ப்பும் 2026 தேர்தலி விஜய் சொன்னது போல், அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெகவுக்கு இடையே தான் நேரடி போட்டி என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த இரண்டில் ஒன்று ஆளுங்கட்சியாகவும், இன்னொன்று எதிர்க்கட்சியாகவும் வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இது, தமிழகத்தின் பிரதான திராவிட கட்சிகளில் ஒன்றான அதிமுகவுக்கும், தேசிய அளவில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கும் ஒரு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும்.
இருப்பினும், இனிமேலாவது பாஜக தலைமை சுதாரித்துக் கொண்டு, அதிமுக-பாஜக கூட்டணியில் பிற சிறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்தால், குறைந்தபட்சம் இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
