புல்வாமாவில் வசிக்கும் டாக்டர் உமர் நபியின் குடும்ப உறுப்பினர்களை, டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த கோயல் கிராமத்தில் போலிஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோயல் கிராமத்தின் முக்கிய நபர் ஒருவர் இது குறித்துகூறியபோது, “நேற்று இரவு 2 மணிக்கு போலிஸ் இங்கு வந்தது. டாக்டர் உமரின் இரண்டு சகோதரர்களை அழைத்து சென்றது. இன்று காலை 10 நிமிடங்களுக்கு முன், அவர்களின் தாயாரையும் போலிஸ் அழைத்து சென்றுவிட்டது. தற்போது வீட்டில் அவருடைய மனைவியும், வேறு சிலரும் மட்டுமே உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
டாக்டர் உமர் பற்றி பேசுகையில், “டாக்டர் உமர் இங்கே அடிக்கடி வருவதில்லை. கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக அவர் வெளியிலேயே வேலை செய்கிறார். அவரை எனக்கு நேரில் தெரியாது,” என்றும் தெரிவித்தார்.
டாக்டர் உமரின் மைத்துனர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், ‘கடந்த வெள்ளிக்கிழமை நான் உமருடன் பேசினேன். தான் நன்றாக இருப்பதாகவும், தேர்வுக்காக நூலகத்தில் படிக்க போவதாகவும் தொலைபேசியில் சொன்னான். மூன்று நாள் கழித்து வருவதாக சொன்னான். யாரோ எங்களை தேடுகிறார்கள், அதனால் உடனே வந்துவிடுமாறு நான் வற்புறுத்தினேன். அவனது மாமனார் வீட்டில் சோதனை நடந்தது என்றும், எங்களுக்கும் அழைப்பு வந்ததால் நாங்களும் பயந்துவிட்டோம். நான் அவனைத் திரும்பவும் வர சொன்னேன். ஆனால், அவன் வர மறுத்து, மிரட்டினான். ‘நீங்கள் என்னை தேடுகிறீர்கள் என்றால், அம்மா இறந்துவிடுவாள்’ என்று சொல்லியும் வர மறுத்தான்.
டெல்லி செங்கோட்டை அருகே வெடித்த i20 காரை உமர் ஓட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர் உட்பட இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மூன்று மருத்துவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மூவரும் அனந்த்நாக் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றியவர்கள்.
இவர்களில் முதல் நபர் டாக்டர் உமர் நபி. இவர் தற்கொலை தாக்குதலுக்கு தயாரானவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஃபரிதாபாத்தில் சோதனை நடந்தபோது இவர் திடீரென காணாமல் போனார். செங்கோட்டையில் வெடித்த i20 காரை இவர் ஓட்டியிருக்கலாம் என்று போலிஸார் நம்புகின்றனர்.
இந்த சம்பவத்தின் முழு பின்னணி குறித்துப் போலிஸார் டாக்டர் உமரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
