டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்பில், 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டெல்லி சுபாஷ் மார்க் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த ஹூண்டாய் ஐ20 ரக காரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பரபரப்பான பகுதியில் நிகழ்ந்ததால், சிதைந்த உடல்களும், சேதமடைந்த வாகனங்களும் சிதறி கிடந்தன. உடனடியாக டெல்லி முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டெல்லி தீயணைப்பு துறையின் 20 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. டெல்லி காவல் துறையின் சிறப்புப்பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புக் குழுவினர் நிலைமையை மதிப்பிட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, டெல்லி போலீசார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் (UAPA), வெடிபொருள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சாதாரண விபத்து அல்ல, தீவிரவாத தாக்குதல் சதி என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு நிகழ்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புதான், ஜம்மு-காஷ்மீர் போலீசார் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து சுமார் 3,000 கிலோகிராம் வெடிபொருட்களை மீட்டெடுத்தனர்.
இதில் 350 கிலோ அம்மோனியம் நைட்ரேட் போன்ற வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் அடக்கம். கைது செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த டாக்டர் ஆதில் ரதர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணை முகமைகள் செங்கோட்டை கார் வெடிப்புக்கும், ஃபரிதாபாத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து வருகின்றனர்.
வெடிப்பு நிகழ்ந்த ஐ20 கார், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி போலீசார், காரின் உரிமையாளரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர்களில் ஒருவரான சல்மான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். இவர் காரை மற்றவர்களுக்கு விற்றதாக தெரிவித்துள்ளார். காரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்கலாம் என்றும், விபத்துக்கு முன் கார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டதாகவும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.
வெடித்த இடத்தில் பள்ளம் ஏற்படவில்லை என்பதாலும், இறந்தவர்களின் உடலில் கூர்மையான நகங்கள் போன்ற உலோக துண்டுகள் மீட்கப்படவில்லை என்பதாலும், இந்த தாக்குதலில் ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்படவில்லை என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும், இது அதிக செறிவுள்ள வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள்ளாக டெல்லி குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டதாக அமித்ஷா கூறினார். தேசிய புலனாய்வு முகமை , தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தடயவியல் ஆய்வகத்தின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இது பயங்கரவாதத் தாக்குதலா என்று செய்தியாளர்கள் அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டபோது, “சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் மற்றும் என்எஸ்ஜி ஆய்வு செய்த பின்னரே, இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன என்று கூறுவது கடினம். இருப்பினும், நாங்கள் எந்தவொரு சாத்தியக்கூறையும் நிராகரிக்கவில்லை; அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அருகிலுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சூழலை ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் இன்று உயர் அதிகாரிகளுடன் மற்றொரு சுற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்த சம்பவம் குறித்து அனைத்துத் தகவல்களும் பொதுமக்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
