பிரதமருக்கு கூட அதிகாரம் இல்லை.. உச்சநீதிமன்றத்தின் அதிகாரமும் குறைப்பு.. இனி எல்லா அதிகாரமும் ஆசிப் முனீர்தான்.. மிக்சர் சாப்பிடும் பாகிஸ்தான் பிரதமரும் எம்பிக்களும்.. சட்ட திருத்தத்தின் மூலம் ராணுவ ஆட்சியா? பாவம் பாகிஸ்தான் மக்கள்..!

பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தில் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட 27வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், நாட்டின் ராணுவ கட்டமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்பின் அடிப்படையே மாற்றியமைக்கப்படுகிறது. இத்திருத்தம்…

asif munir

பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தில் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட 27வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம், நாட்டின் ராணுவ கட்டமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்பின் அடிப்படையே மாற்றியமைக்கப்படுகிறது. இத்திருத்தம் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் கைகளில் முன் எப்போதும் இல்லாத அதிகாரத்தை குவிப்பதுடன், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைக்கக்கூடிய ஒரு புதிய நீதிமன்றத்தையும் உருவாக்குகிறது.

இந்த திருத்தம், நவம்பர் 27, 2025 அன்று நடைமுறையில் உள்ள கூட்டு படைகளின் தலைவர்கள் குழுவின் பதவியை நீக்கிவிட்டு, பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவியை உருவாக்குகிறது.

இந்தப்பதவியைப் படைத்தளபதியே வகிப்பார் என்பதால், ஜெனரல் முனீர், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று ஆயுதப்படைகளின் அரசியலமைப்பு ரீதியான தலைவராக மாறுகிறார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு 2025 மே மாதம் முனீருக்கு வழங்கப்பட்ட ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு இந்த திருத்தம் அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்கிறது. இத்தகைய ஐந்து நட்சத்திர பதவிகளை வகிப்பவர்கள், அதிபரை போன்றே வாழ்நாள் முழுவதும் சீருடை, பதவி மற்றும் சலுகைகளை அரசியலமைப்பு சலுகைகளுடன் தக்க வைத்துக் கொள்வர். இந்த பட்டங்களை நாடாளுமன்றத்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும், பிரதமருக்கு அந்த அதிகாரம் இல்லை.

2025 மே மாதம் நடந்த 4 நாட்கள் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தான் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறைபாடுகள் வெளிப்பட்டதாலேயே இந்த மறுசீரமைப்பு கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ மாற்றங்கள் ஒருபுறமிருக்க, இந்த திருத்தம் ஒரு அரசியலமைப்பு நீதிமன்றத்தை நிறுவுகிறது.

இந்த நீதிமன்றம் அரசியலமைப்பு விளக்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளை கையாளுவதால், பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை அது பறிக்கும் என்று சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த புதிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் 68 வயது வரை பதவியில் நீடிப்பார்கள், ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகின்றனர். இது அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடிய ஒரு நிர்வாகம் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பை உருவாக்கும் என்றும், உச்ச நீதிமன்றம் ஒரு ‘உச்ச மாவட்ட நீதிமன்றமாக’ மாற வாய்ப்புள்ளது என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆளும் கூட்டணி இந்த மாற்றங்கள் கட்டளை அமைப்பை நவீனப்படுத்தும் என்று வாதிட்டாலும், பிரதான எதிர்க்கட்சிகள் இது நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்று கண்டித்துள்ளன. ஒட்டுமொத்தத்தில், இந்த திருத்தம் பாகிஸ்தானின் அதிகார சமநிலையில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு தளபதியின் கீழ் ராணுவ அதிகாரத்தைக் கூட்டி, நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துகிறது.