உலகெங்கிலும் பல்வேறு மூலைகளில் உள்ளூர் மோதல்கள் அதிகரித்து, அது ஒரு பெரிய பிராந்திய போராக உருவெடுக்கும் அபாயம் தற்போது கவலைக்குரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே முடிவுக்கு வராத ரஷ்யா – உக்ரைன் போர் நீடிக்கும் நிலையில், இந்தியா – வங்கதேசம், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், மற்றும் இஸ்ரேல் – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான எல்லை பதற்றங்களும் மோதல் அபாயமும் தற்போது உச்சத்தில் உள்ளன. மத்திய கிழக்கில் வெடிக்க காத்திருக்கும் ஈரான் – இஸ்ரேல் மோதல் குறித்த கசிந்த தகவல்கள், உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே எந்த நேரத்திலும் ஒரு பெரிய அளவிலான போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. சமீபத்திய உளவுத்துறை தகவல்களின்படி, ஈரான் இஸ்ரேலுக்கு எதிராகத் தனது தாக்குதல் திறனை எதிர்பார்த்ததைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த கால தாக்குதல்களின்போது அதிகபட்சமாக 500 ஏவுகணைகளை மட்டுமே ஈரான் பயன்படுத்தும் என்று இஸ்ரேல் எதிர்பார்த்தது. ஆனால், தற்போதைய இராணுவ தயாரிப்புகள், ஈரான் ஒரே நேரத்தில் 2,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்த தயாராகி வருவதை காட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஏவுகணைகளை வீசினால், இஸ்ரேலின் அம்பு மற்றும் டேவிட் ஸ்லிங் போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் கூட நிலைகுலைய வாய்ப்புள்ளது. புதிய அச்சுறுத்தல், இஸ்ரேலின் பாதுகாப்பை முழுமையாகச் சவாலுக்கு உள்ளாக்குகிறது.
இந்தியா – வங்கதேசம்
லஷ்கர்-இ-தைபா (LeT) பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு எதிராக புதிய பயங்கரவாத தாக்குதலை தொடங்கத் திட்டமிட்டுள்ளார். தற்போது பாகிஸ்தான் சிறையில் இருக்கும் சயீத், தனது கூட்டாளிகளை வங்கதேசத்துக்கு அனுப்பி, அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதாக வெளியான தகவல்கள், இந்தியாவின் கிழக்கு பகுதியில் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பாகிஸ்தான் – ஆப்கான் எல்லை பகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தலிபான்களுக்கு (TTP) ஆப்கானிஸ்தானில் இருந்து ஆதரவு கிடைப்பதாகவும், இதனால் இரு நாடுகளின் எல்லை படைகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சூடு நடப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இது, பாகிஸ்தானின் உள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர்: முடிவில்லா சவால்
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ரஷ்யா – உக்ரைன் போர், ஐரோப்பாவின் அமைதிக்கும், உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலிக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், மோதலின் தீவிரமும் அதன் விளைவுகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
உலக வல்லரசுகளுக்கு இடையேயான பிளவுகள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிராந்தியங்களில் புதிய போர் அபாயங்கள் எழுவது, உலகின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஒரு புதிய சவாலாக உள்ளது.
ஏற்கனவே 8 போர்களை நிறுத்தியதாக கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் எத்தனை போரை நிறுத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
