2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத ஒரு புதிய அத்தியாயத்தை திறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது வலுவாக எழுந்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டால், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஒரு ‘கிங் மேக்கராக’ மாறும் வியூகம் குறித்து அரசியல் நோக்கர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய அரசியல் கணிப்புகள் மற்றும் மக்கள் மனநிலை மாற்றங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, 2026 சட்டமன்ற தேர்தலில், இரண்டு முக்கிய கட்சிகளான திமுக அல்லது அதிமுகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் மத்திய அரசின் சவால்கள் போன்றவை திமுகவின் பலத்தை குறைக்கலாம். அதேபோல் அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட தலைமை சிக்கல்கள், உட்கட்சிப் பூசல்கள் மற்றும் இரட்டை தலைமைப் போராட்டங்கள் ஆகியவை அக்கட்சியின் அடித்தளத்தை முழுமையாக மீட்டெடுக்கத் தடையாக இருக்கலாம்.
இத்தகைய பிளவுபட்ட வாக்கு சூழ்நிலையில், மூன்றாவது பிரதான சக்தியாக விஜய்யின் கட்சி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றால், தமிழக அரசியலின் திசை அதன் கைகளில் செல்லும்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டசபை நிலையை உருவாக்கினால், தமிழக அரசியலின் பலம் விஜய் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை சார்ந்து இருக்கும். இந்த கட்டத்தில், விஜய் ‘கிங் மேக்கராக’ மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
விஜய் கட்சிக்கு கிடைத்துள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, ஆட்சியமைக்த் தேவையான 118 என்ற மந்திர எண்ணுக்கு குறைவாக உள்ள கட்சிக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.
திராவிடக் கட்சிகளின் ஆதரவு தளத்தின் ஒரு பகுதியை விஜய் கவர்ந்திருந்தாலும், திமுகவின் அடிப்படை கொள்கைகள் மற்றும் அதன் நிர்வாக அணுகுமுறைகளுடன் இணைந்து ஒரு கூட்டணி ஆட்சியை அமைக்கும் முடிவை விஜய் எடுக்கலாம். இதன் மூலம், தனது கொள்கைகளை செயல்படுத்தும் வாய்ப்பைப் பெறலாம்.
அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் விஜய்க்கு இருப்பதால், அக்கட்சியுடன் ஒரு கூட்டணி அமைப்பதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம். ஜெயலலிதாவுக்கு பிந்தைய அதிமுகவுக்கு தேவைப்படும் புதிய தலைமையை நிரப்புவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமையலாம்.
விஜய் எந்த கட்சிக்கு ஆதரவு அளித்தாலும், தனது கட்சியின் முக்கிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆட்சியில் முன்னிறுத்த, அவர் சில கடுமையான நிபந்தனைகளை விதிக்கும் வாய்ப்பு உள்ளது.
விஜய், திராவிடக் கட்சிகள் எதனுடனும் கூட்டணி அமைப்பதில் விருப்பம் காட்டாமல், தனது கட்சி நடுநிலை வகிக்கிறது என்று அறிவித்தால், தமிழக அரசியல் ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை சந்திக்க நேரிடும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் அரசியல் சட்ட நெருக்கடியை கருத்தில் கொண்டு, சட்டமன்றத்தை கலைத்துவிட்டு மறு தேர்தலுக்குப் பரிந்துரைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இந்த நிலை ஏற்பட்டால், மக்கள்மீது மீண்டும் ஒரு தேர்தல் சுமை சுமத்தப்படும். எனவே, அரசியல் ஸ்திரத்தன்மைக்காக விஜய் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவளிப்பாரா அல்லது முழுமையான ஆட்சி மாற்றத்திற்காக மறு தேர்தலை விரும்புவாரா என்பதை அவரது கையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பலமே தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
