1980ல் அணு ஆயுத தயாரிப்பின் தொடக்க நிலையிலேயே பாகிஸ்தானை தாக்க இந்தியா – இஸ்ரேல் கூட்டு முயற்சி.. ஆனால் இந்திராகாந்தி தடுத்துவிட்டாரா? தடுத்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இந்த கூட்டு தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

கடந்த 80களில் இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து பாகிஸ்தானின் அணு ஆயுத மையத்தின் மீது இரகசியமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இறுதி நேரத்தில்…

indira gandhi

கடந்த 80களில் இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து பாகிஸ்தானின் அணு ஆயுத மையத்தின் மீது இரகசியமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இறுதி நேரத்தில் அத்திட்டத்தை நிறுத்திவிட்டதாகவும் அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ முகவர் ஒருவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல் சர்வதேச புவிசார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தை வேகமாக வளர்த்து வந்த காலக்கட்டத்தில், அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்துவிடுமோ என்ற அச்சமும், பிராந்தியத்தில் அணுசக்தி போட்டி ஏற்பட்டு விடுமோ என்ற கவலையும் இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இருந்தது.

இதே போன்றதொரு அச்சுறுத்தல் காரணமாக, இஸ்ரேல் இதற்கு முன்னர் ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானின் அணுசக்தி மையத்தை குறிவைத்து, இரண்டு நாடுகளும் கூட்டு இராணுவ தாக்குதல் நடத்துவது குறித்து இரகசிய ஆலோசனைகள் நடந்ததாக அந்த முன்னாள் சிஐஏ முகவர் கூறுகிறார்.

இந்தியா மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகளின் கூட்டு தாக்குதல் தயார் நிலையில் இருந்தபோது, பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்த முடிவை தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அணு ஆயுத மையத்தை தாக்கும் ஆபத்து மற்றும் பிராந்தியத்தில் போர் தீவிரமடையும் அபாயம் ஆகியவற்றை இந்திரா காந்தி கருத்தில் கொண்டே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது. இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கைதான் ஒரு பெரும் மோதலை தடுத்ததாகவும், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக் கோட்பாடுகளை நிலைநிறுத்தியதாகவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்தியா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல் ரத்து செய்யப்பட்டது, இந்தியாவை பொறுத்தவரை இராஜதந்திர ரீதியாகவும், அமைதி பேச்சுவார்த்தைக்கான கதவுகளை திறந்து வைப்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் தனது அணு ஆயுதத் திட்டத்தை அப்போதுதான் வளர்க்க தொடங்கியிருந்தது. இந்த திட்டத்தை ஆரம்பத்திலேயே முடக்குவதே இந்த கூட்டு நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்த கூட்டு தாக்குதல் நடந்திருந்தால், ஆப்கானிஸ்தானில் அப்போதைய சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா இரகசியமாக நடத்தி வந்த நடவடிக்கைகளுக்கு இது பெரும் ஆபத்தை விளைவித்திருக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.