பாகிஸ்தானை நிஜத்தில் நடத்துவது யார்? என்ற கேள்விக்கு, பிரதமர் அல்ல, இராணுவ தளபதிதான் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், விரைவில் அந்த கோடும் மறைய போகிறது. பாகிஸ்தான் அரசு, அரசியலமைப்பில் ஒரு புதிய திருத்தத்தை கொண்டுவர ஆலோசித்து வருகிறது. இது நிறைவேற்றப்பட்டால், சிவில்-இராணுவ அதிகார பிரிவு முற்றிலும் நீக்கப்பட்டு, இராணுவ தளபதிக்கு இன்னும் பல மடங்கு அதிகாரங்கள் கிடைக்கும்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த 27-வது அரசியலமைப்பு திருத்தத்திற்கான வரைவை தயாரித்துள்ளார். அவர் தனது கூட்டணி கட்சிகளை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகிறார். கடைசி நேரத்தில் அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டாலும், பணியை செய்து முடிக்கும்படி துணை தலைவருக்கு ஷெரீப் பணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகர்வுக்கு ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சிகள் மற்றும் ஷெரீப்பின் கூட்டணி கட்சிகள் மத்தியிலேயே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தத் திருத்தம் மூன்று முக்கிய விஷயங்களை செய்ய முற்படுகிறது:
1. இராணுவ தலைமைக்கு நிரந்தர அதிகாரம்: ஃபீல்ட் மார்ஷல் பதவி
தற்போது, பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் கூட்டாட்சி அரசின் கீழ், நாட்டின் ஜனாதிபதியின் கட்டளையில் உள்ளது. இந்த திருத்தம் அந்த அமைப்பை மாற்றும். 27வது திருத்தம் ‘ஃபீல்ட் மார்ஷல்’ (Field Marshal) என்ற நிரந்தரமான பதவியை உருவாக்கும். இந்த பதவியில் இருப்பவர் இராணுவத்திற்கு தலைமை தாங்குவார்; மூத்த இராணுவ அதிகாரிகளை நியமிப்பார்; சேவை தலைவர்களுக்கு தலைமை தாங்குவார். இவர் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் சமமான நிலையில், கேள்வி கேட்க முடியாத இராணுவ தலைவராக மாறுவார். இந்தப் பதவி வேறு யாருக்காகவும் அல்ல, தற்போதைய இராணுவ தளபதியான அசிம் முனீருக்காகவே உருவாக்கப்படுவதாக தெரிகிறது. இதன்மூலம் முனீருக்கு மேலும் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும்.
2. நீதித்துறையைக் கைப்பற்றுதல்
இரண்டாவதாக, நீதித்துறையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திருத்தம் உள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஒரு புதிய நீதிமன்றம் உருவாக்கப்படும். இது அரசியலமைப்பு அல்லது அடிப்படை கோரிக்கைகள் போன்ற முக்கியமான வழக்குகளை மட்டுமே விசாரிக்கும். முன்னதாக, நீதிபதிகளின் இடமாற்றத்தை நீதித்துறை மட்டுமே, குறிப்பாக தலைமை நீதிபதிகள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், இந்த அதிகாரம் பிரதமரிடம் ஒப்படைக்கப்படும். முனீர் தனது அரசியல் எதிர்ப்பாளர்களை குறிப்பாக இம்ரான் கான் போன்றவர்களை நசுக்குவதற்காக நீதித்துறையை கருவியாகப் பயன்படுத்தவே இந்த திட்டத்தின் நோக்கம் தெளிவாக உள்ளது.
3. அதிகாரங்களைக் குவித்தல்
மூன்றாவது இலக்கு அதிகாரங்களை மத்திய அரசிடம் குவிப்பது. 2010-ல் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கியச் சட்டம், அதிகாரத்தை மாகாணங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே பிரித்து வழங்கியது. இது கூட்டாட்சிக்கு ஒரு வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனால் அசிம் முனீர் அந்த சட்டத்தை நீக்கி, அதிகாரங்களை இஸ்லாமாபாத்தில் குவிக்க விரும்புகிறார். தற்போது, தேசிய வருவாயில் 42.5% மாகாணங்களுக்கு செல்கிறது. புதிய திட்டத்தின்படி, மத்திய அரசுக்குச் செல்லும் பங்களிப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மாகாண அரசுகளை பலவீனப்படுத்தும் என்பதால், ஷெபாஸ் ஷெரீப்பின் கூட்டணி கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி இதை கடுமையாக எதிர்க்கிறது. இருப்பினும், ஷெரீப் இந்த திருத்தத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்.
இந்த 27-வது திருத்தத்தை சட்டமாக்க, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களுக்கு பிறகு, ஷெபாஸ் ஷெரீப் கூட்டணிக்கு இப்போது அந்த பெரும்பான்மை கிடைத்துள்ளது. சட்டமன்றத்தில் இதற்கு முன் 213 இடங்கள் இருந்த நிலையில், தற்போது 233 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 224 மட்டுமே. மேலவையான செனட்டிலும், அரசியலமைப்பு திருத்தத்திற்கு தேவையான 64 இடங்கள் ஷெரீப்பின் கூட்டணியிடம் சரியாக உள்ளன.
இந்த திருத்தம் நிறைவேறினால், முனீரின் ஆட்சி எந்தவித திரையும் இன்றி வெளிப்படையாக தொடங்கும். அடுத்த சில நாட்கள் இஸ்லாமாபாத்தில் கூட்டணி கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கிடையே பல முக்கிய பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன. இந்த நகர்வு, பாகிஸ்தானை முற்றிலும் இராணுவத்தின் பிடியில் வைக்கும் ஒரு முக்கிய திருப்பமாக அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
