தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களை கொண்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்திருப்பதும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பெரும் பிளவுகளுடன் பலவீனமடைந்துள்ளதும், ஆளுங்கட்சியான திமுக-வுக்கு உள்ளேயும் வெளியேயும் சவால்கள் எழுவதும், இன்று தமிழகத்தில் தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பல்வேறு ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகள் வெளியிடும் கருத்துக்கணிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், தமிழக மக்கள் மனதில் இருப்பது என்ன என்ற கேள்விக்கு விடையளிப்பது கடினமான ஒன்றாக உள்ளது.
தமிழகத்தில் இன்று தேர்தல் நடந்தால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று வெளியாகியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்புகள் ஒரே மாதிரியான முடிவுகளை தருவதில்லை. இது மக்கள் மனநிலையில் உள்ள தெளிவின்மையை காட்டுகிறதா அல்லது களத்தில் நிலவும் குழப்பத்தின் விளைவா என்ற விவாதம் எழுகிறது.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான் கிடைக்கும் என்று காட்டுகின்றன. ஆனால் திமுக தனித்து 118 தொகுதிகள் வெல்லுமா? என்பது கேள்விக்குறி.
உடைந்த அதிமுகவின் வாய்ப்பு?: சில கருத்துக்கணிப்புகள், அதிமுகவின் வாக்கு வங்கிகள் பிரிந்திருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குறிப்பிட்ட சில தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கணிசமான இடங்களை பிடிக்கும் என்றும், சில அதிர்ச்சி முடிவுகள் மூலம் தனிப்பெரும் கட்சியாக வரவும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடுகின்றன. பிளவுபட்ட கட்சி ஆட்சி அமைக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடுவது, அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் தனியாகத் தேர்தலில் நின்றால், அது வாக்குகளை கணிசமாக குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் பிரிக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஒத்துக் கொள்கின்றன. ஆனால், த.வெ.க எவ்வளவு இடங்களை பிடிக்கும் என்பதில் எவ்விதத் தெளிவான முடிவுகளும் இல்லை. தவெக ஆட்சியை பிடிக்கும், அல்லது தொங்கு சட்டசபைக்கு கொண்டு செல்லும் என சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் உணர்வுகளின் பிரதிபலிப்புகள்தான். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி மாற்றங்கள், பிரசாரத்தின் தீவிரம் மற்றும் இறுதி நேர வாக்காளர்களின் முடிவு ஆகியவை கணிப்புகளை தலைகீழாக மாற்றலாம்.
தமிழகத்தில் தற்போது மூன்று முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால், களத்தில் உண்மையான போட்டி என்பது திமுக-வுக்கும், த.வெ.க. மற்றும் அதிமுக ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்துக்கும் இடையேதான் உள்ளது.
திமுக-வைப் பொறுத்தவரை, அதன் பலமே அதன் நலத்திட்டங்களும், வலுவான உட்கட்சி அமைப்பும் மற்றும் கூட்டணியும் தான். இருப்பினும், இந்த ஆட்சியில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆளுங்கட்சியின் மீதான ஒருவித சலிப்புணர்வு ஆகியவை நிச்சயம் ஒரு ஆட்சி எதிர்ப்பு அலையாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த அலையின் வாக்குகளை யார் அதிகமாக அறுவடை செய்கிறார்களோ, அவர்களே திமுக-வுக்கு பிரதான போட்டியாளராக மாறுவார்கள்.
அதிமுக கட்சி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் பிளவுகளால் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தனது பாரம்பரியமான வாக்கு வங்கிகளை மீண்டும் ஒருங்கிணைத்து, பிளவுபட்ட வாக்குகளை மீண்டும் பெறுவதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மிகப்பெரிய சவால். அதிமுகவின் வாக்குகள் சிதறும் பட்சத்தில் அது திமுக-வுக்கு பெரும் சாதகமாக அமைந்துவிடும்.
தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சக்தி. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் அரசியலிலும் சலிப்படைந்த இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. த.வெ.க. நேரடியாக திமுக-வைவிட, அதிமுக-வின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க.வின் வருகை, எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாமல் வாக்குகளை பிரித்தால், திமுக எளிதாக வெற்றி பெறும் சூழலை உருவாக்கும். எனவே, திமுக-வுக்கும் த.வெ.க-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படுவதை விட, த.வெ.க-வின் இருப்பு திமுக-வின் வெற்றிக்கு மறைமுகமாக வழிவகுக்கலாம்.
தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் சில காரணங்கள், கருத்துக்கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவை:
கூட்டணி வியூகம்: தேர்தல் அறிவிக்கப்படும்போது யார் யாருடன் கூட்டணி அமைக்கிறார்கள் என்பது முக்கியம். விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கிறாரா அல்லது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஒரு புதிய அணிக்கு தலைமையேற்கிறாரா என்பது முடிவை தீர்மானிக்கும்.
கடைசி நிமிட பிரச்சாரம்: திராவிட கட்சிகளின் ஆழமான கட்டமைப்பும், பூத் வாரியான செயல்பாடுகளும் கடைசி நேரத்தில் வாக்குகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றும். தலைவர்களின் தனிப்பட்ட கவர்ச்சி, கடைசி வார பிரச்சார அனல் ஆகியவை மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்டவை.
சைலண்ட் வாக்காளர்கள் : தாங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லாத அல்லது கருத்துக்கணிப்பில் பங்கேற்காத மறைமுக வாக்காளர்கள்தான் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆச்சரிய முடிவுகளை தந்துள்ளனர். இந்த வாக்காளர்களின் மனதை கணிப்பதுதான் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உள்ள மிகப்பெரிய சவால்.
எனவே, தற்போது கருத்துக்கணிப்புகள் தரும் குழப்பமான முடிவுகள் ஒருபுறமிருக்க, தமிழகத்தின் வெற்றி என்பது அதிமுகவின் வாக்குகள் எவ்வளவு ஒருங்கிணைக்கப்படுகின்றன, த.வெ.க எவ்வளவு வாக்குகளை பிரிக்கிறது, மற்றும் ஆட்சி எதிர்ப்பு அலைக்கு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
