இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், மிரட்டல்களும் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவும் ஜப்பானும் தங்கள் கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுப்படுத்தி, ஒரு புதிய பாதுகாப்பு வழியை உருவாக்கியுள்ளன. இந்த ஆழமான உறவு, பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியா-ஜப்பான் உறவானது, ஜனநாயகம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பொதுவான விஷயங்கள் மற்றும் பிராந்தியத்தின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலை பற்றிய ஒற்றுமையான புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவு நிலை உயர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் மற்றும் புதிய ஜப்பான் பிரதமரான சானே டகாயிச்சி அவர்கள் பொறுப்பேற்ற உடன் இரு தலைவர்களும் நடத்திய உரையாடல், இந்த புதிய உறவுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து வெளியிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டு பிரகடனம், இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு இலக்குகளை புதிய நிலைக்கு உயர்த்தி உள்ளது. இதன் மூலம், சீனா போன்ற ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை இரு நாடுகளும் கூட்டாக எதிர்கொள்ளும் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பகுதியில் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராவதற்கு ஜப்பான் தற்காப்பு படைகள் மற்றும் இந்திய ஆயுத படைகளுக்கு இடையே விநியோகங்கள் மற்றும் சேவைகளின் பரஸ்பர ஏற்பாடு குறித்த ஒப்பந்தத்தின் மூலம் தளவாடப் பகிர்வை மேம்படுத்துதல். வளர்ந்து வரும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள் உட்பட தகவல்களை பகிர்தல். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியான கடல்சார் சூழலை மேம்படுத்த கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஒத்துழைப்பை அதிகரித்தல். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு பொதுவான கடல்சார் நிலவரத்தை புரிந்து கொள்வதற்காக, தகவல் பகிர்வை மேம்படுத்துதல். ஜப்பான் தற்காப்பு படைகள், இந்திய ஆயுத படைகள் மற்றும் கடலோர காவல்படையை சேர்ந்த கப்பல்கள் துறைமுகங்களுக்கு அடிக்கடி வந்து செல்வதை பெருக்குதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல் இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதவும் இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. தேசியப் பாதுகாப்பு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் மற்றும் விண்வெளிக் குப்பைகளை கண்காணித்தல் போன்றவற்றுக்காக விண்வெளிக் கட்டமைப்புகளை பயன்படுத்துதல். உயர்நிலை தொழில்நுட்பம் மற்றும் தளவாடங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு கொள்கைகள் குறித்துப் பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் சீனாவுக்கு ஒரு நேரடியான சவால் விடுப்பதாக இந்த ஆலோசனை அமைகிறது. எதிர்காலத்தில் சீனா, இந்திய எல்லைகளிலோ அல்லது ஜப்பானின் சென்காகு தீவுகள் போன்ற பகுதிகளில் அத்துமீறல் செய்தாலோ, இந்த ஆழமான இராணுவ மற்றும் தளவாட ஒத்துழைப்பின் மூலம், இரு நாடுகளும் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த பதிலடியை கொடுக்க தயாராகின்றன. இருதரப்பு பாதுகாப்பு தயார்நிலையை வலுப்படுத்துவதன் மூலம், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு சக்திக்கும் எதிராக தங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
