இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நீர் தடுக்கப்படும் என்று இந்தியா தெளிவான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான உலக அமைதி மற்றும் பொருளாதார நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் அறிக்கையில் இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய கடுமையான பின்விளைவுகளை பற்றி விரிவாக அலசுகிறது.
இந்தியாவின் அணைகள் பெரும்பாலும் மின்சாரம் தயாரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. நீரை தேக்கி வைக்கும் நீர்த்தேக்கங்கள் அல்ல. இதனால், இந்தியா முழுமையாக நீரை தடுக்க முடியாது என்று விமர்சகர்கள் கூறிய நிலையில், IEP அறிக்கை வேறு ஒரு கோணத்தை காட்டுகிறது:
ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பின், இந்தியா சலால் மற்றும் பாக்லிகார் அணைகளில் இருமுறை நீர்த்தேக்கத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்தது. பொதுவாக, இதுபோன்ற சமயங்களில் கீழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானுக்கு முன் தகவல் அளிக்க வேண்டும். ஆனால், எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் செனாப் நதியின் சில பகுதிகளை இந்தியா முழுமையாக திசை திருப்பியதால், பாகிஸ்தானின் வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நதியின் தரைப்பகுதி முழுவதும் வறண்டது. இது விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இந்தியாவிடம் பெரிய தேக்க அணைகள் இல்லையென்றாலும், தற்போதுள்ள ‘ரன் ஆஃப் தி ரிவர்’ அணை அமைப்புகளில், நீரை ஓரளவு கையாள்வதன் மூலம் குறிப்பாக விதைக்கும் மற்றும் அறுவடை செய்யும் காலங்களில் பாகிஸ்தானிய விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த நீர்த் தேக்குத் திறன் அதிகபட்சம் 30 நாட்கள் மட்டுமே ஆகும்.
இந்த நிலையில், இந்தியா திட்டமிட்டு குறுகிய காலத்திற்கு நீரை தடை செய்தாலோ அல்லது அதிகப்படியாக திறந்துவிட்டாலோ, அது பாகிஸ்தானின் விவசாய அமைப்பை அடியோடு ஆட்டம் காண செய்யும் என்று அறிக்கை கூறுகிறது. 12 கோடிக்கும் அதிகமான மக்கள் சிந்து நதியினை நம்பி நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால், இது அவர்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும்.
இந்த நீர் அதிர்ச்சி நடவடிக்கை விவசாயத்தை மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் பல துறைகளையும் பாதிக்கும். கோதுமை, அரிசி, கரும்பு ஆகியவற்றில் கோலோச்சிய பாகிஸ்தான், இப்போது அரிசி மற்றும் சர்க்கரையை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்படும். இதனால், உணவு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். பாகிஸ்தானில் பிறப்பு விகிதம் உலக சராசரியை விட அதிகமாக உள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்டால், இந்த கூடுதல் மக்களுக்கு உணவு அளிப்பது பெரும் சவாலாக மாறும். நீரை ஆன் அண்ட் ஆஃப் என நிறுத்தி விடுவதால், அந்த நதியை சுற்றியுள்ள நிலத்தின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை மாறி, விளைச்சலை பாதிக்கும்.
வறட்சியின் காரணமாக, கிராமப்புற மக்கள் வேலை தேடி நகரங்களை நோக்கி நகர்வார்கள். இது நகரங்களில் வேலையின்மை மற்றும் மக்கள் தொகை அழுத்தத்தை அதிகரித்து, உள்நாட்டில் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மொத்தத்தில் இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியா கையில் எடுத்திருக்கும் நீர் ஆயுதம், வெறும் அச்சுறுத்தல் மட்டுமல்ல. இது சுற்றுச்சூழல், புவியியல், மக்கள் தொகை மற்றும் விவசாயம் ஆகிய நான்கு நிலைகளிலும் பாகிஸ்தானை பாதிக்கக்கூடிய வலிமை மிக்க ஒரு கருவியாகும். பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தான் விரும்பவில்லை என்றால், அதன் ஒட்டுமொத்த விவசாயமும் நடுத்தெருவுக்கு வரும் அளவுக்கு இந்தியாவிடம் இப்போது பலம் உள்ளது என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
