தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணியில் பெரிய கட்சி எது? என்ற மறைமுகமான போட்டி தற்போது காங்கிரஸுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஒரு பிரபல வார இதழ் இதை, “கூட்டணியில் பெரிய கட்சி நாங்கதான்: திரிகொளுத்திய காங்கிரஸ், தீப்பந்தம் சுழற்றும் சிறுத்தைகள்” என்ற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையாகவே வெளியிட்டுள்ளது.
இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான போட்டி 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 2026 தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணியும் மிக முக்கியம். வி.சி.க. கூட்டணியை விட்டு பிரிந்தால் தி.மு.க.வுக்கு பலத்த அடியாக இருக்கும். அதேபோல் காங்கிரஸ் விலகினால், மத்திய அரசியலில் தி.மு.க.வின் பிடி தளர்ந்துவிட கூடும். இதன் காரணமாக, மத்திய அரசில் செல்வாக்கு வேண்டும் என்று நினைக்கும் தி.மு.க.வால் காங்கிரஸை எளிதில் கைவிட முடியாது.
இதை ஒரு பலமாக பயன்படுத்திக் கொண்டு, காங்கிரஸ் தி.மு.க.விடம் அதிக சீட் பேரங்களை பேச வாய்ப்புள்ளது. வி.சி.க.வுக்கு அதிகபட்சம் 10 இடங்களுக்கு குறைவாக கிடைத்தாலும், காங்கிரஸுக்கு 20க்கும் அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க.வுக்கு எதிராக காங்கிரஸ், வி.சி.க. போன்ற கட்சிகள் அவ்வப்போது கருத்து தெரிவிப்பதும், தி.மு.க.வின் செயல்பாடுகள் சரியில்லை என்று பேசுவதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இது, தேர்தலின்போது கூடுதல் இடங்களை பெறுவதற்காக மெயின் கட்சியான தி.மு.க.வுக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கும் ஒரு பேரம் பேசும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
தி.மு.க. பலமாக இருந்தால், காங்கிரஸ், வி.சி.க. கட்சிகள் குறைவாக பெறும். ஆனால் காங்கிரஸ், வி.சி.க. பலமாக இருந்தால், அதிக இடங்களை கோரலாம். 2026 தேர்தலில் யார் வலுவாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த சீட்டுப் பேரங்கள் அமையும்.
காங்கிரஸின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் அவர்கள், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்ட அவர், குற்றங்கள் தொடர்வது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2019-ல் 5,934 ஆக இருந்தது, 2021-ல் 8,501 ஆக அதிகரித்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளில் 40%க்கும் அதிகமாகும். இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல என்றும், இவற்றை தமிழ்நாடு அரசு சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
ஆளும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸே தி.மு.க.வுக்கு எதிராக இத்தகைய புள்ளிவிவரங்களை குறிப்பிட்டுப் பேசுவது, ஏதோ ஒரு வடிவில் தி.மு.க. தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
தவெக என்ற இன்னொரு ஆப்ஷன் காங்கிரசுக்கு இருப்பதால், திமுகவை காங்கிரஸ் தைரியமாக விமர்சிப்பதாகவும், எனவே காங்கிரஸை திமுக கூட்டணியில் தக்க வைத்து கொள்ள வேண்டுமென்றால் இதுபோன்ற விமர்சனங்களை மென்மையாக எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
