சமீப நாட்களாக சமூக ஊடகங்களிலும், சர்வதேச அரசியல் வட்டாரங்களிலும் ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. அது, பாகிஸ்தான் இராணுவம் பாலஸ்தீனிய விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட தயாராகிறது என்ற குற்றச்சாட்டு. சில ஊடகங்களின் தகவல் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, 20,000 பாகிஸ்தானிய துருப்புகள் ‘சர்வதேச நிலைப்படுத்துதல் படை’ என்ற பெயரில் காசாவில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
இந்த நடவடிக்கையின் வெளிப்படையான நோக்கம் அமைதியை நிலைநாட்டுவதாக இருந்தாலும், திரைக்கு பின்னால் நடக்கும் விவகாரம் வேறு என்கிறார்கள் ஆய்வாளர்கள். இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகுக்கும் பாகிஸ்தானின் ஷபாஸ் ஷெரீபுக்கும் இடையில் நடந்த இரகசிய சந்திப்பில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்து கட்டுவதே பாகிஸ்தான் இராணுவத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியப் பணி என்று கூறப்படுகிறது.
இது ஹமாஸை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் இராணுவம் கூலிப்படையாக செயல்பட தயாராகிறது என்ற விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் நம்பகமான மூத்த பத்திரிகையாளர் ஒருவரை மேற்கோள் காட்டி வெளியான தகவலின்படி, இந்த இரகசிய ஒப்பந்தத்திற்காக பாகிஸ்தான் இராணுவ தளபதி அசீம் முனீர், ஒரு வீரருக்கு மாதத்திற்கு 10,000 அமெரிக்க டாலர் கோரியதாக தெரிகிறது. ஆனால், இஸ்ரேல் தரப்பு இதற்கு வெறும் $100 முதல் $1,500 வரை மட்டுமே கொடுக்க முன்வந்ததாகவும், இந்த தொகையை வளைகுடா நாடுகள் இணைந்து வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் இன்றைய மோசமான நிதி நெருக்கடி காரணமாக, இந்தியா-இஸ்ரேல் உறவை கட்டுப்படுத்தவும், வளைகுடா நாடுகளில் தனது இருப்பை தக்கவைக்கவும், பணத்திற்காகவும் பாகிஸ்தான் இந்த ஆபத்தான அரசியல் நகர்வை எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலை இன்னும் அங்கீகரிக்காத நிலையில், இஸ்ரேலின் மிக முக்கியமான எதிர்ப்பாளர்களில் ஒன்றான ஹமாஸை ஒழிக்க இஸ்ரேலின் கூலிப்படையாக செயல்படுவது, அந்நாட்டின் கொள்கையில் உள்ள பெரும் முரண்பாட்டை காட்டுகிறது.
உள்ளூர் தீவிரவாத குழுவான தெஹ்ரீக்-இ-லபைக் பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்வதை போலவே, ஹமாஸை ஒழிக்கும் இந்த முடிவு, காசாவில் உள்ள மக்களை பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, உண்மையில் ஹமாஸை ஒழிப்பதே அதன் உள்நோக்கம் என்று தெளிவாகிறது.
பாகிஸ்தானின் இந்த கூலிப்படை நடவடிக்கை, அரபுலகில் உள்ள பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கவும், வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பாகிஸ்தானியர்களால் ஈட்டப்படும் அந்நிய செலாவணியை குறைக்கவும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் துரோகியாக பார்க்கப்படும் நிலைக்கும் வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
அதே நேரத்தில் இந்த சர்ச்சைக்குரிய இராணுவ நகர்வு குறித்து பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
