இந்தியாவை நான் குறை சொல்ல மாட்டேன்.. இந்திய வெளியுறவு கொள்கையின்படி சரிதான்.. வர்த்தகம் என்பது நாடுகளை ஒன்றிணைக்க பயன்பட்டது, ஆனால் அதுவே இப்போது ஆயுதமாக மாறிவிட்டது.. இது பெரும் ஆபத்து.. பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்திருப்பது போன்ற விவகாரங்கள் குறித்து பேசியுள்ள பின்லாந்து அதிபர்…

oil

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதித்திருப்பது போன்ற விவகாரங்கள் குறித்து பேசியுள்ள பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர், இது உலகளாவிய கூட்டு பொறுப்பு என்று கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய்க்காக இந்தியாவை மட்டும் தனியாகக் குறிவைப்பது நியாயமற்றது என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சீனாவே ரஷ்ய எண்ணெயை அதிகம் வாங்கும் நாடு, ஐரோப்பாவும் ரஷ்ய எரிசக்தியை பயன்படுத்துகிறது என்ற நிலையில், இந்தியாவை மட்டும் தனிமைப்படுத்துவது நியாயமா என்று பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

“இந்த விவகாரத்தில் நான் இந்தியாவைப் பழி சொல்ல மாட்டேன். ஏனென்றால், இந்தியா ஒரு பெரிய, சுதந்திரமான நாடு. அதன் வெளியுறவு கொள்கைக்கு எது சிறந்தது என்பதை அதுவே தீர்மானிக்கிறது,” என்று அவர் பதிலளித்தார்.

முன்பு நம்மை ஒன்றிணைக்க பயன்படுத்தப்பட்ட விஷயங்கள் இப்போது நம்மை பிரித்தாள பயன்படுகின்றன. வர்த்தகம் அல்லது எரிசக்தி போன்ற பரஸ்பர சார்புநிலை நம்மை ஒன்றிணைப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அவை ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தொடரும் நாடுகள் மீது பழி போடாமல், அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் வலியுறுத்தினார். ஐரோப்பாவைப் பொறுத்தவரை, நாங்கள் ரஷ்ய எரிசக்தி மீதான எங்கள் சார்பை 80% குறைத்துள்ளோம். இது பாராட்டத்தக்கது,” என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற சில நாடுகள் இன்றும் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

சீனா ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை தடுக்க, அமெரிக்கா சில முக்கிய நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது. “ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவதால், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த விவகாரத்தில் விலகி செல்கின்றன. இது கடினமான வெளியுறவு கொள்கை முடிவுகள்,” என்றும் அவர் கூறினார்.

“எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி இல்லையென்றால், ரஷ்யாவால் இந்த போரை தொடர முடியாது. ஆனால், நான் இந்தியாவையோ அல்லது வேறு நாட்டையோ குறை சொல்லவில்லை. அனைவரையும் கூட்டு சேர்ந்து குற்றம் சாட்டுகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்பட வேண்டும், அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைந்தது இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று பொது சபையில் நான் இரண்டு முறை வலியுறுத்தியுள்ளேன். இந்தியா போன்ற நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறாமல் இருப்பது முற்றிலும் தவறு. நான் லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு உறுப்பினரும், ஆப்பிரிக்காவிலிருந்து இருவர், ஆசியாவிலிருந்து இருவர் என சேர்க்க பரிந்துரைத்துள்ளேன். இந்தியா போன்ற முக்கிய நாடுகள் ஐ.நா.வில் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதினால், அந்த அமைப்பு தொடர்ந்து பலவீனமடையும்,” என்று அவர் முடித்தார்.