இந்தியாவில் நிகழும் எந்தவொரு பயங்கரவாத செயலும், இனி ‘போர் நடவடிக்கை’யாகவே கருதப்படும் என்ற அரசியல் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்திய ராணுவம் தனது செயல்பாடுகளை மாற்றி அமைத்து, போர் தயார்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
தென்மேற்கு ராணுவ கமாண்ட் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர், இந்திய ராணுவத்தின் புதிய வியூகங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இந்தியாவில் இனி எப்போது பயங்கரவாத செயல் நடந்தாலும், அது இனி ஒரு போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று எங்களுக்கு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அந்த ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதன் விளைவாக, ராணுவம் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். எதிரிகள் நம் மண்ணில் எதாவது அத்துமீறலில் ஈடுபட்டால், அதற்கு உடனடியாகவும், முழுமையாகவும் பதிலடி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை தென்மேற்கு கமாண்ட் மேற்கொண்டு வருகிறது.
இந்த உயர்மட்ட தயார்நிலையை உறுதிப்படுத்த, ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதிய பயிற்சி நுட்பங்களை புகுத்தியுள்ளது. இன்று நடைபெற்ற ஒத்திகையில், அனைத்து பிரிவுகளும் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த துப்பாக்கி சூடு ஒரு சிறு பகுதியாகும்.
இந்திய ராணுவத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ட்ரோன்கள், எதிர்-ட்ரோன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, ட்ரோன்களிடமிருந்து டாங்கிகளைப் பாதுகாப்பது போன்ற புதிய நுட்பங்கள் இன்றைய பயிற்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
எதிர்காலத்தில் நிகழ வாய்ப்புள்ள போர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நடக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, தென்மேற்கு கமாண்ட் தனது பயிற்சியில் இரவு நேர ஒத்திகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
பெரும்பாலான சண்டைகள் இரவில் நடக்கும். எனவே, தென்மேற்கு கமாண்டில் நாங்கள் கிட்டத்தட்ட 70% பயிற்சிகளை இரவில் மேற்கொள்கிறோம். மீதமுள்ள 30% மட்டுமே பகலில் செய்யப்படுகிறது. வீரர்கள் அதற்கு பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த உயர்நிலை தயார்நிலை மூலம், எப்போது தேவைப்பட்டாலும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
