இந்தியாவுடன் ஒருபோதும் பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது என்று அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாக்கோ கூறியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போதைய சூழலில் அமெரிக்கா மறைமுகமாக பாகிஸ்தானுக்கு உதவி செய்து, இந்தியாவை தன் கட்டுப்பாட்டில் வைக்க சிறிய நாடுகளை தூண்டி தீவிரவாத அச்சுறுத்தலை தர முயல்வதாக பார்க்கப்படும் நிலையில், சிஐஏ-வின் முன்னாள் அதிகாரியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
சிஐஏ-வில் 15 ஆண்டுகள் பணியாற்றியவரும், பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராக இருந்தவருமான ஜான் கிரியாக்கோ சமீபத்தில் அளித்த நேர்காணலில், “பாகிஸ்தான் எத்தனை முறை இந்தியாவுடன் மோதினாலும் அது வெற்றி பெறாது” என்று திட்டவட்டமாக கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியா இன்று உலகின் நான்காவது பெரிய இராணுவ சக்தி. தொழில்நுட்பம், நுண்ணறிவு திறன் மற்றும் பொருளாதார வலிமை என அனைத்திலும் இந்தியா பாகிஸ்தானை பல மடங்கு தாண்டி நிற்கிறது. எனவே, இந்தியாவை தூண்டுவது பாகிஸ்தானுக்கே ஆபத்தான முடிவாகும்” என்று எச்சரித்தார்.
பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவை மிரட்ட முடியும் என்று நம்புகிறது. ஆனால், இந்தியா அஞ்சாது என்று கிரியாக்கோ தெரிவித்தார்.
“இந்தியா ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் உடனடியாக தக்க பதிலடி கொடுத்துள்ளது. 2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019 பாலகோட் தாக்குதல், மற்றும் சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை இதற்கு சிறந்த உதாரணங்கள். இந்தியா இன்று தன்னம்பிக்கையுடன் தன் மக்களை பாதுகாக்கும் வல்லமை கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமெரிக்க அதிபர்கள், 2001 நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் 2008 மும்பை தாக்குதல் போன்ற சமயங்களில் இந்தியா நேரடி யுத்தம் நடத்தும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்தியா அமைதி காத்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சி காலத்தில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் நிதி உதவி வழங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக பாகிஸ்தான் தனது அணு ஆயுத கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைத்ததாகவும் கிரியாக்கோ மேலும் ஒரு பகீர் தகவலை வெளியிட்டார்.
ஆனால், இன்றைய உலக அரசியல் மாறி வருகிறது. “இன்று சவுதி அரேபியா சீனாவுடனும் இந்தியாவுடனும் நல்லுறவை மேம்படுத்துகிறது. இதில் இந்தியா ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. உலக நாடுகள் இந்தியாவின் வலிமையை மதிக்கின்றன. இந்தியா எந்த ஒரு பிரச்சனையையும் சமாதானமாக சீர் செய்யும் திறன் கொண்ட நாடு” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் திட்டங்களை வெளிப்படையாக உறுதிப்படுத்திய முதல் சிஐஏ அதிகாரி மற்றும் இதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் அதிகாரி என்ற பெயரை பெற்றவர் ஜான் கிரியாக்கோ. அவர் வெளிப்படையாகக் கூறியுள்ள இந்தக் கருத்துகள், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் உண்மையான நிலையை உலகம் முன் வெளிப்படுத்துகின்றன.
இன்றைய இந்தியா ஒரு சக்தி வாய்ந்த ஜனநாயகம். இராணுவ வலிமை, பொருளாதார வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம், உலக அளவிலான மரியாதை ஆகியவற்றின் இணைப்பால் இந்தியா வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. “இதன் எதிரே நின்று யாரேனும் சவால் விடும் பொழுது, அவர்கள் தங்களின் முடிவை திரும்பப் பெற வேண்டும்” என்பதே ஜான் கிரியாக்கோவின் எச்சரிக்கை. இந்தியா அமைதியை விரும்பும் நாடு; ஆனால் தன் நாட்டின் இறையாண்மையை சீண்டினால், அதற்கு தக்க பதிலடியை கொடுக்கும் வல்லமை தற்போது இந்தியாவிடம் உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
