கடந்த சில வாரங்களாக எல்லை பதற்றம் நீடித்து வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் ஒரு பெரும் புயலைக் கிளப்பும் வகையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த முக்கிய மதகுரு ஒருவர், வெளிப்படையாக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “இந்தியா – பாகிஸ்தான் போர் மீண்டும் வந்தால், நாங்கள் இந்தியாவை ஆதரிப்போம்” என்று அவர் முழங்கிய வீடியோவை ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, அந்த மதகுருவை பாகிஸ்தான் உளவுத்துறை உடனடியாக கைது செய்துள்ளது.
பாகிஸ்தான் உள்நாட்டு ஒடுக்குமுறை மற்றும் அதன் வெளியுறவு கொள்கைகளுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு உள்ளேயே எதிர்ப்பு வலுத்து வருவதை இந்த சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது.
மௌல்வி குல்சார் என்ற பெயருடைய இந்த மதகுரு, கைபர் பக்துன்க்வாவின் மர்தான் பகுதியிலிருந்து செயல்படுபவர். இவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஆற்றிய உரை ஒன்றில் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.
தனது பிராந்தியத்தில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை அவர் வெளிப்படையாக பட்டியலிட்டார். பாகிஸ்தானிய ராணுவமே நாட்டிற்குள் கொடூரமாக நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தச் சூழலில், “நாங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஒரு போர் நடந்தால், நாங்கள் இந்தியாவை ஆதரிப்போம்” என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும், இந்திய ராணுவம் கொடூரமானது அல்ல என்றும், மாறாக பாகிஸ்தான் ராணுவமே கொடூரமானது என்றும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
பாகிஸ்தானின் தேசியவாத உணர்வுகளுக்கு எதிராக, ஒரு மதகுருவே அண்டை நாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது, அங்கு நிலவும் உச்சகட்ட வெறுப்பையே வெளிப்படுத்துகிறது.
மௌல்வி குல்சாரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பாகிஸ்தான் அதிர்ச்சியில் உறைந்தது. அதன் விளைவாக, பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புகள் அவரை உடனடியாக கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதகுருவின் இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை ஆப்கானிஸ்தானின் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் நடத்தி வரும் ‘தகவல் போரின்’ ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அதன் எல்லைக்குள் உள்ள மதவாத மற்றும் தீவிரவாத குழுக்களை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தும் அதே நேரத்தில், சொந்த நாட்டு ராணுவத்தின் மீதான விமர்சனங்களை அது பொறுத்துக்கொள்வதில்லை.
மௌல்வி குல்சார் போன்ற ஒரு மதகுருவின் கருத்துக்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுக்கோப்பு மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறைகள் குறித்த உள்நாட்டு மக்களின் குரல் இது. வெளிப்படையான கைதுகள், ராணுவத்தின் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைக்கும்.
இனிவரும் நாட்களில் பாகிஸ்தான் ராணுவம், மௌல்வி குல்சாரை எப்படி கையாள போகிறது, இந்த சம்பவத்தை உள்நாட்டு ஊடகங்கள் மூலம் எப்படி மூடி மறைக்க போகிறது, அல்லது அவருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமா என்பதே இப்போது அரசியல் களத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும். இந்த ஒற்றை சம்பவம், பாகிஸ்தானின் உள்நாட்டு மற்றும் வெளியுறவு போக்கில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையக்கூடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
