சென்னையை தி.மு.க.வின் கோட்டையாகக் கருதுவது பொதுவான கருத்து. 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றது இதற்கு சான்று. இருப்பினும், தற்போது தி.மு.க. தலைமை நடத்தியதாக கூறப்படும் ஒரு சர்வே, சென்னையில் கட்சிக்கு சவால்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கியாக இருந்த நகர்ப்புற ஏழை மற்றும் அடித்தட்டு மக்களே தற்போது அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக 2021-க்குப் பிறகு, கூவம் ஓரம் மற்றும் ரயில்வே ஓரத்தில் இருந்த குடிசைகளை அகற்றி, குடிசை இல்லாத சென்னையை உருவாக்குகிறோம் என்று கூறி, இம்மக்களை செம்பரம்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற தொலைதூர பகுதிகளுக்கு அரசு மாற்றியது.
இவர்களுக்கு வீடுகள் ‘இலவசமாக’ வழங்கப்படும் என்று கூறி வெளியேற்றப்பட்டாலும், அங்கு சென்ற பின் மாநகராட்சி நிர்வாகம் வாடகை கட்ட சொல்லி வீடுகளுக்கு பூட்டு போட தொடங்கியது. இதனால், இங்கேயே ஆட்டோ ஓட்டி, சிறு வியாபாரம் செய்து வந்த மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்ற படித்த நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில், பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற விவகாரங்களால் அதிருப்தி நீடிக்கிறது. மேலும், அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்காமல், கட்சி தொண்டர்களுக்கு மட்டும் பணம் கொடுத்ததால், பிற வாக்காளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த அதிருப்தியின் மத்தியில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, தி.மு.க.வின் கோட்டையில் ஒரு மாபெரும் ஓட்டையை உருவாக்கியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி கருத்து தெரிவிக்கிறார்.
விஜய்யின் ஆதரவு, தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கியாக இருந்த உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளைகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் வலுவாக பரவியுள்ளது என்று கூறிய டி.எஸ்.எஸ். மணி “விஜய்யும் அ.தி.மு.க.வும் சேரக் கூடாது” என்று தி.மு.க. சிந்திக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது என்றும் கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி இலவசமாக கொடுத்த குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு, தற்போதைய தி.மு.க. அரசு ‘பங்களிப்புத் தொகை’ என்ற பெயரில் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் வரை பணம் கேட்கிறது. மேலும், சிதிலமடைந்த வீடுகளை இடித்து கட்டும் பணிகளிலும் மக்கள் போராடுகின்றனர்.
இந்த அனைத்து பிரச்னைகளின் விளைவாக, தி.மு.க.வின் கோட்டையான சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பெரும்பான்மையானவை கேள்விக்குறியாகிவிட்டன என்பதே யதார்த்தமாக உள்ளது. இந்த சவால்களைச் சமாளிக்க, தெரியாமல் தி.மு.க. தடுமாறுவதாக டி.எஸ்.எஸ். மணி விமர்சனம் செய்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
