தற்போது, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,000-ஐ தாண்டி செல்கிறது. இந்த வரலாறு காணாத விலை உயர்வுக்கு பின்னணியில், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை கொள்முதல் செய்வது முக்கிய காரணமாக உள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை சவால் செய்யும் ஒரு பெரிய வியூகம் இதன் பின்னணியில் இருக்கிறதா என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அவரது வர்த்தக போர் கொள்கைகள் பிற நாடுகளின் மீது இறக்குமதி வரி விதிப்பது, H-1B விசா கட்டணம் உயர்வு போன்ற நடவடிக்கைகள் சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கின. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் அமெரிக்க நிறுவனங்கள் குழப்பமடைந்து முதலீடுகளில் தயக்கம் காட்டின. இதனால், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறைவு ஏற்பட்டது.
வேலைவாய்ப்பு குறையும் சூழலில், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கிறது. வட்டி விகிதம் குறைந்தால், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிகிறது. டாலர் மதிப்பு சரிவதால், முதலீட்டாளர்களும் பொதுமக்களும் தங்கள் கையில் உள்ள டாலரை விற்றுவிட்டு, பாதுகாப்பான முதலீடான தங்கத்தை வாங்க தொடங்குகின்றனர். இது உலகளாவிய தங்கம் விலையை மீண்டும் உயர செய்கிறது. ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அமெரிக்க டாலரின் மதிப்பு 10% குறைந்த நிலையில், தங்கத்தின் விலையோ 60% உயர்ந்துள்ளது.
முதலீட்டாளர்களை போலவே, உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிக அளவில் வாங்க தொடங்கியுள்ளன. தங்கம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வலிமைக்கான சேமிப்பாக பார்க்கப்படுகிறது. உலக மத்திய வங்கிகள் 2022 மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளிலும் தலா 1,000 டன்னுக்கும் அதிகமாக தங்கத்தை வாங்கியுள்ளன ஆனால் 2025ல் இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியும் தங்கத்தை அதிகமாக வாங்கி வருகிறது. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டில் 72 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியுள்ளது. மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்குவதற்கு பின்னணியில் வலுவான அரசியல் காரணிகளும் உள்ளன.
2022-ல் ரஷ்யா-உக்ரைன் போரை தொடங்கியபோது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் அந்நிய செலாவணி கையிருப்பை குறிப்பாக டாலர்களை, முடக்கின. இந்தச் சம்பவம், உலக நாடுகள் மத்தியில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியது: “நமது கையில் இருக்கும் அமெரிக்க டாலர் எப்போது வேண்டுமானாலும் முடக்கப்படலாம் என்றால், அது பாதுகாப்பானதா?” என்ற கேள்வி எழுந்தது.
ரஷ்யாவுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட சீனா, தங்கத்தின் கொள்முதலை தீவிரப்படுத்தியது. சீன மத்திய வங்கியிடம் தற்போது 2,300 டன் தங்கம் உள்ளது. இந்த தங்கத்தின் கையிருப்பை 5,000 டன்னாக உயர்த்த சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி சீனா செல்வது, தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவிடம் தற்போது 8,133 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இந்த இலக்கை போட்டியாகக் கருதி, சீனா தங்கத்தை குவித்து வருவது, உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை உடைக்கும் ஒரு முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது.
அமெரிக்க டாலர் உலக வர்த்தகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமாக இருப்பதால், உலக நாடுகள் டாலரை பயன்படுத்தும் போது, அமெரிக்காவின் நாணய மதிப்பு உயர்கிறது. இந்தச் சூழலை மாற்ற பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக பொதுவான கரன்சியை உருவாக்க முயற்சிப்பது, சொந்த நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்ய தொடங்குவது போன்ற நடவடிக்கைகள் டாலர் ஆதிக்கத்தை குறைக்க உதவுகின்றன.
மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை சேமிக்கும்போது, அதன் நிதி வலிமை அதிகரிக்கிறது. இந்த வலிமையை பயன்படுத்தி, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் சொந்த நாணயமான ரூபாயில் வர்த்தகத்தை தொடர முடியும். அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி சென்று, டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக போர் கொள்கைகள் அதன் டாலர் மதிப்பையும் மேலும் சரிய செய்தால், பெரும்பாலான நாடுகள் வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை தவிர்க்கவே முயற்சிக்கும்.
இந்த சூழலில், வர்த்தகத்திற்காக உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உலோகமாக தங்கம் உள்ளது. மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி சேமிப்பது, உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு தொடக்கப் புள்ளியா? என்ற கேள்வியை வலுப்பெற செய்கிறது. டாலர் ஆதிக்கம் நீக்கப்பட்டால், உலக பொருளாதாரத்தின் பன்முகத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
