நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் அரசியலில் களமிறங்கிய பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் களம் புதிய கேள்விகளை எழுப்பி வருகிறது. அவற்றில் முதன்மையானது, “திராவிடம் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை விஜய்யால் அடைய முடியுமா? என்பதுதான். 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட திராவிட இயக்க அரசியல் கட்டமைப்பை, ஒரு நடிகரின் வருகை முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்ற விவாதம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.
விஜய் அமைத்திருக்கும் அரசியல் வியூகம், தற்போதைய இரண்டு முக்கிய திராவிட கட்சிகளையும் அடுத்தடுத்த காலகட்டங்களில் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில், ஒரு முக்கிய திராவிட கூட்டணியை வலுவிழக்க செய்வது அல்லது அவர்களின் வெற்றி வாய்ப்புகளை சிதைப்பதே விஜய்யின் முதல் திட்டம்.
2026 தேர்தலில் கணிசமான இடங்களை பிடிப்பதன் மூலம், 2031 சட்டமன்ற தேர்தலை தனது முழு பலத்துடன் எதிர்கொள்ள விஜய் திட்டமிடலாம். இதன்மூலம், மற்றொரு திராவிட கட்சியையும் பலவீனப்படுத்தி, தமிழக அரசியலில் ஒரு ‘திராவிடம் இல்லாத’ புதிய சகாப்தத்தை தொடங்க அவர் முயற்சி செய்யலாம்.
இது ஒரு நீண்டகால இலக்கு. திராவிடக் கட்சிகளின் அடிப்படை கட்டமைப்பையும், தொண்டர் பலத்தையும் அறிந்த ஒரு புதிய சக்தி, அவர்களை முற்றிலுமாக அகற்றுவது என்பது சாதாரணமானதல்ல, அல்லது சாத்தியமானது அல்ல என்று எடுத்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட இயக்கங்கள் ஒரு நூற்றாண்டு கால வரலாறு கொண்டவை. நீதிக்கட்சியில் தொடங்கி, பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மூலம் தமிழகத்தின் சமூகம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் தளங்களில் ஆழமாக வேரூன்றியவை திராவிட கொள்கைகள்.
கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு போன்ற சமூக நீதி கொள்கைகளை தமிழகத்தில் நிலைநிறுத்தியது திராவிட அரசியல்தான்.
இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், மகளிருக்கு சொத்துரிமை போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் மூலம், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையுடன் திராவிட கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தி ஆதிக்க எதிர்ப்பும், மாநில சுயாட்சி கோரிக்கையும் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் திராவிட இயக்கங்களை பிணைத்துள்ளன.
திராவிட சித்தாந்தங்களின் அடிப்படை பயன்களை அனுபவித்த ஒரு சமூகத்தில், “திராவிடம் இல்லாத அரசியல்” என்ற இலக்குக்கு மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. அப்படியே இருந்தாலும் திராவிட கட்சிகளின் செயல்பாட்டை முடக்க முடியுமே தவிர, அவற்றின் கொள்கைகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை முற்றிலும் தகர்ப்பது மிகவும் கடினம்.
நடிகர் விஜய்யின் ரசிகர் பலமும், இளைஞர்களின் ஆதரவும் அவருக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், அவர் திராவிட சித்தாந்தத்தை மாற்ற அல்லது அகற்ற முயற்சித்தால், பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். மேலும் அவரே பெரியார், அண்ணா, எம்ஜிஆர் பெயரை வாக்குக்காக பயன்படுத்துகிறார். திராவிடக் கட்சிகளின் ஆதரவுத்தளம் கிராமப்புறங்கள் மற்றும் அடித்தட்டு மக்களிடையே ஆழமாக பரவியுள்ளது. இந்த ஆதரவை, வெறும் சினிமா கவர்ச்சி மூலம் முழுமையாக ஈர்க்க முடியுமா என்பது சந்தேகமே.
மொத்தத்தில் நடிகர் விஜய்யின் திட்டம் தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘மாற்றத்தை’ உருவாக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நூற்றாண்டுகளின் போராட்டத்தால் உருவான திராவிட சித்தாந்தத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருவது என்பது இயலாத ஒன்று தான் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
