தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. அதேசமயம், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தவெகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைகின்றன.
டெல்லியில் இந்த நான்கு முனை அரசியல் நகர்வுகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் அவர்களின் கருத்துகளை பார்க்கலாம்.
விஜய்யின் தவெக சம்பந்தப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களின் எண்ணிக்கை, விஜய்க்கு தேசிய அளவில் இருக்கும் செல்வாக்கை காட்டுகிறது. விஜய்க்கு மக்கள் கூட்டம் தான் கூடுகிறது என்று பார்த்தால் விஜய் வழக்கில் கூட வழக்கறிஞர்கள் அதிகம் கூடியுள்ளனர் என்பது தான் ஆச்சரியம்..
திமுக அரசுக்கு ஆதரவாக காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் வாதிடுகின்றனர். ஆனால், தவெகவுக்காக கோபாலசுப்பிரமணியம், அரியமா சுந்தரம், ரங்காச்சாரி உட்பட மூன்று பிரபல தமிழக வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர்.
நீதிபதிகளின் கேள்வி: தவெக தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தைப் படித்த நீதிபதிகள், தமிழக அரசை நோக்கி 12 முதல் 15 கேள்விகளை எழுப்பியது பரபரப்பை கிளப்பியது. குறிப்பாக, “எதற்காக அவசர அவசரமாகத் தகனம் செய்தீர்கள்? உடற்கூறாய்வு இல்லாமல் ஏன் உடல் ஒப்படைக்கப்பட்டது?” போன்ற கேள்விகள், திமுக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 13 திங்கட்கிழமை 11 மணிக்கு இந்த வழக்கின் உத்தரவு வரவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் கேள்விகளை கணக்கில் கொண்டால் விஜய்க்கு சாதகமாகவே தீர்ப்பு வர வாய்ப்புள்ளது என்று தனிப்பட்ட யூகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த தீர்ப்புக்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் திமுக அரசாங்கத்தை ‘வேருடன் பிடுங்கி எறிய வேண்டும்’ என்ற ஒரே இலக்குடன் செயல்படுகிறார். பீகார் தேர்தலில் மும்முரமாக இருக்கும் அமித்ஷா, அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தை பற்றி பேசலாம் என்று கூறி, தனது நம்பகமான உதவியாளரான ஜெய் பாண்டாவை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அமித்ஷாவின் முக்கிய நிலைப்பாடு என்னவென்றால், தவெகவை கூட்டணியில் சேர்ப்பதா வேண்டாமா என்ற முடிவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் எடுக்க வேண்டும்; அவருடைய முடிவை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளும் என்று அவருக்கு முழு பொறுப்பையும் கொடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி Vs விஜய் என்பதை விட, விஜய் Vs உதயநிதி என்ற ரீதியில்தான் தமிழக அரசியலை அமித்ஷா பார்க்கிறார். உதயநிதிக்கு எதிராக விஜய்க்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே பா.ஜ.க. உள்ளது.
ராகுல் காந்தி வெளிநாட்டில் இருக்கும் நிலையில், திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீது அக்கட்சியின் மாவட்ட அளவில் பெரும் அதிருப்தி உள்ளது. திமுகவின் ஊழல் காரணமாக தங்கள் கட்சி தமிழகத்தில் மதிக்கப்படுவதில்லை என்று பலரும் கருதுகின்றனர். இந்த அழுத்தமே ராகுல் காந்தி, விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த காரணமாக இருக்கலாம். ஆனால், ராகுல் காந்தி இத்தனை அழுத்தம் இருந்தும் திமுக-வை விட்டு வெளியேற தயங்குவது ஒரு முரண்பாடாக உள்ளது.
மத்தியில் நரேந்திர மோடியையும், மாநிலத்தில் திமுகவையும் எதிர்க்க விரும்பாத ஒரு சூழலில் விஜய் உள்ளார். 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக மமதையுடன் செயல்பட்டபோது, நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமரானதை விஜய் யோசிப்பதாக டெல்லி பத்திரிகையாளர்களிடையே பேச்சு உள்ளது.
மொத்தத்தில், டிசம்பர் 2025 மாத மத்தியில்தான் தமிழகத்தில் தவெகவின் கூட்டணி குறித்த ஒரு தெளிவான முடிவு தெரியவரும். அதுவரையில் அரசியல் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
