தமிழக அரசியல் களம் மீண்டும் அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில் வரும் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் ராஜதந்திரங்கள் ஒரு புதிய சதுரங்க ஆட்டம்போல நகர்கிறது. விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைக்கலாம் என்ற தீவிரமான யூகங்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
சமீபத்தில் கரூரில் விஜய்யின் பேரணியின்போது ஏற்பட்ட பெரும் நெரிசலும், குழப்பமும் அவருக்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை கொடுத்தது. இந்த சம்பவத்தை தி.மு.க. அரசியல்ரீதியாக பயன்படுத்த முயன்றது. ஒருபுறம் அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது பா.ஜ.க., விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்கான ‘மெகா’ திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள், கரூர் சம்பவத்தால் உருவானதா? என்றால் நிச்சயம் ‘ஆம்’ என்ற பதில் தான் கிடைக்கிறது. பா.ஜ.க.-விஜய் இடையேயான திட்டம் என்ன? இந்த கூட்டணி ஸ்டாலினுக்கு சவால் விடுக்குமா? அ.தி.மு.க.வின் அடுத்த நகர்வு என்ன? விரிவாக பார்ப்போம்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, விஜய்யின் கட்சியும் தி.மு.க.வும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தன. தி.மு.க., இச்சம்பவத்திற்கு விஜய்யை நேரடியாக குற்றம் சாட்ட, த.வெ.க.வோ, இதன் பின்னணியில் ஒரு அரசியல் சதி இருப்பதாக குற்றம் சாட்டியது.
இந்த சூழலில்தான், கரூர் சம்பவம் குறித்து சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, த.வெ.க. உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. இதேபோல, பா.ஜ.க.வும் ஆரம்பம் முதலே எஸ்.ஐ.டி. விசாரணைக்கு பதிலாக, சி.பி.ஐ. விசாரணை கோரி வருகிறது.
தி.மு.க. விஜய்யை அரசியல் ரீதியாகத் தாக்க முற்படும் அதே வேளையில், பா.ஜ.க. அவரை தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக முயல்கிறது. மூத்த பா.ஜ.க. தலைவர்கள், த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, “விஜய், நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று உறுதியளித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க. தலைவர் உமர் ஆனந்தன், தி.மு.க. அரசின் விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தார். இது, பா.ஜ.க. வெளிப்படையாக விஜய்யின் பக்கம் சாய்வதை காட்டுகிறது. கரூர் நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, பா.ஜ.க.வின் என்.டி.ஏ. குழுவினர் கரூர் சென்று ஆய்வு செய்தபோது, விஜய்யையோ, த.வெ.க.வையோ அவர்கள் குறை கூறவில்லை. மாறாக, அரசாங்கத்தின் பாதுகாப்பு குறைபாட்டை கடுமையாக சாடினர். ஒவ்வொரு கட்டத்திலும் பா.ஜ.க. விஜய்யை முழுவதுமாக ஆதரித்து, தி.மு.க.வின் தாக்குதல்களில் இருந்து அவரை பாதுகாத்து வருகிறது.
பா.ஜ.க.வின் உட்கட்சி மதிப்பீட்டின்படி, அடுத்த தேர்தலில் விஜய்க்கு சாதகமான அலை வீசினால், மறைந்த நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் விஜய்யின் பக்கம் திரும்பக்கூடும். இது, பா.ஜ.க.வுக்கு ஒரு பெரிய பலமாக அமையும்.
மறுபுறம், அ.தி.மு.க.க்குள் உட்கட்சி பூசல்கள் நீடிப்பதாலும், தினகரனையும், ஓ.பி.எஸ்.ஸையும் மீண்டும் சேர்க்க எடப்பாடி பழனிசாமி விரும்பாததாலும், பா.ஜ.க. அ.தி.மு.க.வை மட்டும் முழுமையாக நம்பியிருக்க முடியாது. எனவே, விஜய்யின் நட்சத்திர பலத்தை பயன்படுத்தி ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க பா.ஜ.க. முயல்கிறது.
விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் பா.ஜ.க.வுடன் ஓரளவுக்கு ஒத்துப்போகின்றன. அவர் தி.மு.க.வின் நாத்திக கொள்கையை எதிர்க்கிறார், வாரிசு அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிறார்.
விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு மிகப்பெரியது என்றாலும், தனித்து வெற்றி பெற அவருக்கு போதுமான அரசியல் கட்டமைப்பு இல்லை. எனவே, அவர் தி.மு.க.வை எதிர்கொள்ள என்.டி.ஏ. கூட்டணி அவசியமாகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த கூட்டணி உருவானால், தொகுதிப் பங்கீடு மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. முதலமைச்சராக வேண்டும் என்ற நீண்ட கால இலக்குடன் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால், கூட்டணி கட்டுப்பாடுகள் அவருடைய பயணத்தை மட்டுப்படுத்தக்கூடும்.
இதற்கிடையில், தி.மு.க. மிகவும் கவனமாக செயல்படுகிறது. விஜய்க்கு எதிராக எந்த ஒரு கடுமையான நடவடிக்கையும் எடுத்தால், அது அவருக்கு சாதகமாக மாறிவிடக்கூடும் என்பதை உணர்ந்து, தி.மு.க. அரசு மிகவும் நிதானத்துடன் இச்சூழலை கையாள்கிறது.
‘ஆபரேஷன் விஜய்’ என்பது வெறும் ஒரு கூட்டணி பற்றியதல்ல; இது தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் சதுரங்க பலகையையும் மாற்றி அமைக்கும் ஒரு சக்திவாய்ந்த நகர்வாகும். இந்த திராவிட கோட்டையை அசைக்க பா.ஜ.க. மேற்கொண்ட ‘லாங் டெர்ம் கேம்’ வெற்றி பெறுமா என்பதை, 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
