பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடைய டேட்டா சென்டர் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதை, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலே இந்த முடிவுக்கு பிரதான காரணமாகும். உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இந்தியாவில், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பின் எதிர்கால போக்கை இந்த நிலைமை மாற்றி அமைக்கக்கூடும் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமேசான், கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரும் அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான டேட்டா சென்டருக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் தாமதம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக புதிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என தொழில்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
“ஆர்டர்கள் தயாராக இருக்கின்றன; ஆனால், நிறுவனங்கள் பேனாவை எடுத்து, ‘இப்போதைக்கு கையெழுத்திட வேண்டாம்’ என்று முடிவெடுக்கின்றன,” என்று NTT குளோபல் டேட்டா சென்டர்ஸ் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் அலோக் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் தங்கள் முதலீட்டு திட்டங்களை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைக்கு நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை கவனமாக பார்க்கவே அவை விரும்புகின்றன.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகப் பதற்றம் சமீப மாதங்களாக மோசமடைந்துள்ளதே இந்த தயக்கத்திற்கான மையக் காரணம். கடந்த ஆகஸ்ட்டில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்ததை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களின் மீதான வரியை 25% ஆக உயர்த்தியது. பின்னர், இந்த வரியை மேலும் உயர்த்தி, மொத்தம் 50% ஆக இரட்டிப்பாக்கியது. அதேபோல் செப்டம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்த புதிய விதியின்கீழ், H1B விசா விண்ணப்பங்களுக்கு ஒருமுறை கட்டணமாக $100,000 விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிக வரி விதிப்பால், உலகளாவிய விநியோக சங்கிலியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், டேட்டா சென்டர்கள் அமைப்பதற்கான சாதனங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலைகளை கணக்கிடுவது சிக்கலாக மாறியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களால்கூட இந்த பொருளாதார கணக்கீட்டு சவாலை எளிதில் புறக்கணிக்க முடியவில்லை.
அமேசான், கூகுள் போன்ற பெரிய கிளவுட் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த டேட்டா சென்டர்கள் தேவையில் சுமார் 30%ஐ பூர்த்தி செய்கின்றன. இது விரைவில் 35% ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்புக்கான அதிகரித்து வரும் தேவையால், இந்தியாவின் டேட்டா சென்டர்கள் திறன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.2 ஜிகாவாட்லிருந்து 3.5 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். ஆனால் இதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்படுவது, கிளவுட் சேவைகளின் விரிவாக்க வேகத்தை குறைத்து, கோடிக்கணக்கான இந்திய பயனர்களின் அன்றாட டிஜிட்டல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தற்போதைய இந்த ஸ்தம்பிப்பு என்பது, நிறுவனங்கள் இந்திய சந்தையை முற்றிலும் கைவிடுவதாக அர்த்தமில்லை என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இது, எச்சரிக்கையுடன் காத்திருக்கும் ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.
10 முதல் 15 ஆண்டுகள் நீடிக்கும் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர், அமெரிக்க-இந்திய வர்த்தக கொள்கைகளில் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன என்பதை பார்க்கவே அவை அமைதியுடன் காத்திருக்கின்றன,” என்று ஒரு சந்தை ஆய்வாளர் கூறியுள்ளார்.
வலுவான இணைய பயனர் எண்ணிக்கை, டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு ஆதரவான அரசு விதிகள் மற்றும் உலகளாவிய ஐ.டி. தளத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் ஆகியவை தொடர்ந்து வலுவான அடிப்படை அம்சங்களாகவே உள்ளன.
எனவே, இந்த முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து மீண்டும் தொடங்க, இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமாக வர்த்தக பதற்றங்கள் வேகமாக தணிக்கப்படுமா என்பதுதான் இந்திய பொருளாதாரத்தின் முன்னுள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
