தமிழக அரசியல் களத்தில் இப்போது அதிகம் பேசப்படும் விஷயம் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி சேரும் என்பதுதான். குறிப்பாக, ‘கொள்கை எதிரி’ என்று பாஜக-வை வெளிப்படையாக விமர்சித்த நடிகர் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. கரூர் சம்பவம், திரைமறைவு பேச்சுவார்த்தைகள் என பல வதந்திகள் சுழன்றடித்தாலும், விஜய் தனது ‘கொள்கை எதிரி கடைசி வரை கொள்கை எதிரிதான்’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, தமிழக வெற்றி கழகத்தின் மீது அதிக அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு காரணமாக பார்க்கப்படுவது கரூர் சம்பவம் ஆகும். கரூர் போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு, மீண்டும் அரசியலில் நிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால், தவெக-வுக்கு ஒரு ‘வலிமையான துணை’ தேவைப்படுகிறது என்றும், அது அதிமுக – பாஜக கூட்டணி-யாக இருக்கலாம் என்றும் ஒரு சாரார் வாதிடுகின்றனர். இந்தக் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, திரைமறைவில் தவெக-வின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் விஜய் – அமித் ஷா சந்திப்பு நடக்கலாம் என்றும் செய்திகள் பரவின.
இத்தகைய அழுத்தமான சூழலில், விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதுதான் தமிழக அரசியல் மையப்புள்ளி. விஜய், தன்னுடைய முதல் மாநாட்டில் இருந்தே பாஜக-வை கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்ட நிலையில், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றினால் அது அவருடைய அரசியல் இமேஜை மொத்தமாக பாதிக்கும் என நம்புகிறார். கொள்கை ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டு, பின்னர் அதிகாரத்தின் நிமித்தம் அதே கூட்டணியில் இணைவது, அவருடைய தூய்மையான அரசியல் பிம்பத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர் அஞ்சுகிறார்.
எனவே, “கொள்கை எதிரி என்று அறிவித்த பாஜக, கொள்கை எதிரியாகவே இருக்கட்டும்” என்ற முடிவில் விஜய் மிக தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், திமுக-வும் அரசியல் எதிரியாகவே இருக்கட்டும் என்பதால், இரு பிரதான கட்சிகளையும் சாராமல், தனித்து அல்லது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாம் என அவர் வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் தனித்து போட்டியிட விரும்பினாலும், தேர்தல் களத்தில் ஒரு தேசியக் கட்சியின் துணை இருப்பதும், தேசிய அளவில் தனது குரல் ஒலிக்க அது உதவும் என்பதும் அவருக்கு தெரியும். இந்த இடத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சாத்தியமான தேர்வாக பார்க்கப்படுகிறது. பாஜக-வின் தீவிர எதிர்ப்பில் காங்கிரஸ் கட்சி இருப்பது, விஜய்யின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் இணைந்து கூட்டணி சேரும் முடிவில் அவர் தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தவெக – காங்கிரஸ் கூட்டணி குறித்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள், ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு துவங்கலாம் என்றும், அப்போது கூட்டணி உறுதிசெய்யப்படலாம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி சேர்ந்தால், தமிழக அரசியலில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும்.
அரசியல் எதிரிகள் மற்றும் அதிகார மையங்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு விஜய் பணியாமல், உறுதியான தனித்த நிலைப்பாட்டை எடுப்பது, அவருக்கு ஒருவித அனுதாப அலைகளை உருவாக்கி, அனுதாப வாக்குகளை அதிகரிக்க வழிவகுக்கலாம். ‘எதிர்ப்புகளை மீறி துணிந்து தனித்து நிற்கிறார் என்ற பிம்பம் இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களிடம் செல்லலாம்.
தவெக தனித்து களம் காணும் பட்சத்தில், தமிழக அரசியல் களம் ‘மூன்று முனைப் போட்டியாக’ மாறும். இது பொதுவாக, ஆளும் கட்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கும்: திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கும், தவெகவுக்கும் பிரிவதால், திமுக-வின் நிலையான வாக்குகள் எளிதில் வெற்றியை உறுதிசெய்யலாம்.
அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக மற்றும் மேலும் சில சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்தித்தால், அந்த கூட்டணியும் நிச்சயமாக வலுப்பெறும். ஆனால், தவெக-வின் பங்களிப்பு இல்லாமல், திமுக-வை வீழ்த்தப் போதுமான வாக்கு வங்கியை கூட்டணிக் கட்சிகள் வைத்திருக்குமா என்பது கேள்விக்குறி. விஜய்யின் வருகை அதிமுக கூட்டணியின் வாக்குகளை பிரிக்கிறதா, அல்லது திமுக வாக்குகளை பிரிக்கிறதா என்பதை பொறுத்தே அதன் தாக்கம் அமையும்.
மொத்தத்தில் கொள்கை ரீதியாக உறுதியுடன் நிற்க விஜய் எடுக்கும் முடிவை, தமிழகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. இது தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதும் ஒரு முக்கியமான தருணமாக அமையலாம்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
