நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், பாஜக எதிர்ப்பு என்ற தமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், கடந்த கால நிகழ்வுகள் மற்றும் அவரது கொள்கை முழக்கங்களின் அடிப்படையில் அவர் பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக கரூர் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், விஜய்யின் அரசியல் வளர்ச்சி முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்பு பின்னணியிலேயே அமைந்துள்ளது என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான அடித்தளம், அவர் திரைப்படங்களின் மூலம் நேரடியாக மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததில் இருந்தே தொடங்கியது. விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தில், விஜய் பேசிய வசனங்கள் பா.ஜ.க.வால் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. குறிப்பாக, ஜிஎஸ்டியை விமர்சித்து பேசிய வசனங்கள் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தின. தமிழிசை, எச் ராஜா போன்ற பா.ஜ.க.வின் தலைவர்கள் பலரும் விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த எதிர்ப்புதான், விஜய் மக்கள் மத்தியில் ஒரு பாஜக எதிர்ப்பாளர் என்ற இமேஜை பெற முக்கிய காரணமாக அமைந்தது.
அதுமட்டுமின்றி மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அடைந்த துயரங்களை பற்றி விஜய் ஒரு பேட்டியில் பேசினார். இந்த பேட்டி பா.ஜ.க.வின் எதிர்ப்பை மேலும் அதிகரித்தது.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தபோது, மத்திய வருமான வரித் துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் விஜய்க்கு எதிராக மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, விஜய்யை விசாரணைக்கு அழைத்து சென்ற இந்த நிகழ்வுக்கு பிறகு, தமிழக ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான அனுதாபமும், மத்திய அரசு மீதான அதிருப்தியும் பெருகியது.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, விஜய் தனது கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்தும் போது, பா.ஜ.க. மீதான தனது எதிர்ப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். தனது அனைத்து பொதுக் கூட்டங்களிலும் விஜய், பா.ஜ.க.வை நேரடியாக ‘கொள்கை எதிரி’ என்று முழங்கி வருகிறார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மீதான விமர்சனங்களை அவர் வைக்கும்போது, பா.ஜ.க. மீதான தனது எதிர்ப்பை மிகவும் அழுத்தமாக பதிவு செய்கிறார்.
விஜய்யின் அரசியல் பயணம், தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகளை மட்டுமல்லாமல், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மீதான அதிருப்தி ஓட்டுகளையும், குறிப்பாக, திராவிடக் கட்சிகள் அல்லாத தேசிய கட்சியின் ஆதிக்கம் வேண்டாம் என்று நினைக்கும் வாக்காளர்களின் நம்பிக்கையையும் பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால், இந்த அடித்தளம் முற்றிலுமாக சிதைந்துவிடும் என்பதை விஜய் நன்கு அறிவார்.
கரூர் சம்பவத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க. ஆதரவு அளித்திருந்தாலும், அது தி.மு.க.வின் அரசியல் அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரு தற்காலிக ஆதரவாக மட்டுமே இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது என்பது, விஜய் தனது ‘சுய அரசியல் அடையாளத்தை’ இழக்க நேரிடும். அவர் ஒரு சுயேச்சையான மாற்று சக்தியாக தன்னை நிலைநிறுத்த விரும்பும்போது, தேசிய கட்சியின் அணியில் இணைவது அவரது அடிப்படை கொள்கைக்கே முரணானது.
தமிழகத்தில் ஒரு பெரிய பகுதி வாக்காளர்கள் மத்தியில் பா.ஜ.க. எதிர்ப்பு உணர்வு வலுவாக உள்ளது. அ.தி.மு.க. – பா.ஜ.க.வுடன் விஜய் இணைந்தால், இந்த பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் மொத்தமாக தி.மு.க. அணிக்குச் செல்ல நேரிடும். இதனால், கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகளைக் கூட இழக்க நேரிடும் அபாயம் உள்ளது.
எனவே, கடந்த கால திரைப்பட போராட்டங்கள் முதல், சமீபத்திய கொள்கை முழக்கங்கள் வரை, விஜய் பா.ஜ.க.வை தனது ‘கொள்கை எதிரியாகவே’ கருதி வருகிறார். இதனால், தேர்தல் வியூகத்தின் எந்த ஒரு கட்டத்திலும், பா.ஜ.க. கூட்டணியில் அவர் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று அரசியல் நோக்கர்கள் ஆணித்தரமாக கணித்து வருகின்றனர். பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலை அவர் இனியும் தொடர்வதே அவரது கட்சிக்கு நிரந்தர பலம் சேர்க்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
