விஜய் ஆபத்தானவராக இருந்தாலும் பரவாயில்லை.. நாங்கள் அவருக்கு தான் ஓட்டு போடுவோம்.. பத்திரிகையாளர் மணி கருத்தும் அதற்கு பதிவாகி வரும் மக்களின் கமெண்ட்ஸ்களும்.. கரூர் விவகாரம் விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தவே இல்லையா?

சமீபத்தில் கரூரில் நடந்த துயர சம்பவமும், அதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகளும், தமிழக அரசியல் களத்தில் ஒரு வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தின் தாக்கம் காரணமாக விஜய்யின் தவெகவுக்கு எதிராக…

vijay mani

சமீபத்தில் கரூரில் நடந்த துயர சம்பவமும், அதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாடுகளும், தமிழக அரசியல் களத்தில் ஒரு வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தின் தாக்கம் காரணமாக விஜய்யின் தவெகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அணி திரளும் என்ற ஆரம்பக்கட்ட பிம்பம் தகர்ந்து, மாறாக, அநேக கட்சிகள் விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும் திமுகவுக்கு எதிராகவும் அணி திரள்வது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து மூத்த ஊடகவியலாளர் மணி அவர்கள் ஒரு சிறப்பு நேர்காணலில் முன்வைத்த கருத்துகள், தற்போதைய அரசியல் சூழலின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்துகின்றன.

ஆரம்பத்தில், கரூர் துயர சம்பவம் நடந்தபோது, அதன் தார்மீக பொறுப்பு கூட்டத்தை நடத்திய தவெக தலைவரான விஜய்யின் மீது திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கள நிலவரம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிடமும், அரசியல் வட்டாரத்திலும், இந்த துயரச் சம்பவத்திற்கான பொதுமக்களின் கோபம் விஜய்யின் பக்கமோ அல்லது அவரது ரசிகர் மன்றத்தின் பக்கமோ திரும்பாமல், ஆளும் திமுக அரசாங்கத்தின் மீது திரும்பியுள்ளது என்பதை மணி உறுதி செய்துள்ளார்.

மேலும், பாஜக சார்பில் ஹேமாலினி தலைமையில் குழு அமைக்கப்பட்டதும், அதிமுக மறைமுகமாகவும் நேரடியாகவும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதும், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் தவெக கொடி, பேனர் காணப்படுவதும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விஜய்க்கு ஒரு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, திமுகவின் தலைவர்களையும் ஸ்டாலின் குடும்பத்தையும் கடுமையாக விமர்சிக்கும் ஒரு புதிய கட்சி தலைவரான விஜய்யுடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என்பதை காங்கிரஸ் தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் இந்த செயல், திமுகவுக்கு அனுப்பப்படும் ஒரு தெளிவான எச்சரிக்கையாக பார்க்கப்படுவதாக மணி கூறுகிறார். நாங்கள் உங்களை மட்டுமே நம்பி இல்லை; எங்களுக்கும் ஒரு மாற்று சக்தி இருக்கிறது; தேவைப்பட்டால் நாங்கள் செக் வைக்கத் தயார்” என்பதை இந்த சந்திப்பு மறைமுகமாக உணர்த்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மட்டுமல்லாமல், திமுக கூட்டணியில் உள்ள மற்ற பெரும்பாலான கட்சிகளும் இந்த விவகாரத்தை பெரிதாக பேசுவதில்லை அல்லது விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைக்கவில்லை. விசிக தலைவர் திருமாவளவன் மட்டுமே விஜய்யை ஒரு ஆபத்தானவர் என்று பேசியுள்ளார். அதுகூட அவரது கட்சியின் வாக்கு சதவீதம் விஜய்யால் குறைகிறது என்ற கோபத்தில் பேசியிருக்கலாம்.

மொத்தத்தில் கரூர் சம்பவம், விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், கள நிலவரமோ வேறுவிதமாக உள்ளது. மணியின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தால் விஜய்யின் செல்வாக்கு ஒரு சதவீதம் கூட குறையவில்லை. மாறாக, திமுக அரசின் மீதான கோபமே அதிகரித்துள்ளது.

இப்போது திமுகவின் முதல் வேளை இந்த விவகாரத்தை வரவிருக்கும் தேர்தலில் விஜய்க்கு எதிராக பயன்படுத்தலாம் என்று நினைப்பதற்கு பதிலாக, இந்த சம்பவம் தங்களுக்கு எதிராக திரும்புவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்றும் மணி கூறியுள்ளார்.

திமுக, இந்த விவகாரத்தை எளிதாக கையாள முடியும் என்று கூற முடியாது. வரும் ஆறு மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ளதால்), இந்த விவகாரம் மேலும் பெரிதாக்கப்படும். தற்போது உருவாகியுள்ள அரசியல் கூட்டணி காய் நகர்த்தல்கள், விஜய்யை ஒரு மையப் புள்ளியாக கொண்டு, திமுகவுக்கு எதிராக பல கட்சிகள் அணி சேர்வதற்கான அச்சாரமாக அமையக்கூடும்.

கடைசியாக விஜய்க்கு ஆதரவான அலை அதிகாரித்தாலும் விஜய் ஆபத்தானவர் என்றும், விஜய் அரசியல் தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல என்பதையும் மணி பதிவு செய்கிறார். ஆனால் விஜய் ஆபத்தானவர் என்றாலும் நாங்கள் அவருக்கு தான் ஓட்டுபோடுவோம் என்று மணியின் கருத்துக்கு ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.