தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் நாமக்கல் பெரும் அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. நாமக்கல்லில் 17 நிமிடங்கள் மட்டுமே பேசியபோதும், அவர் நிகழ்த்திய உரை பல்வேறு அரசியல் விவாதங்களை தொடங்கியுள்ளது.
இன்று அதிகாலையிலிருந்து நாமக்கல்லில் மக்கள் கூட்டம் குவிய தொடங்கியது. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பங்கள் அதிக அளவில் காணப்பட்டனர். பூரண கும்ப மரியாதையுடன் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சிகள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரப்புரை காலத்தை நினைவூட்டியது. திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விஜய்யின் வாகனம், நாமக்கல் நகருக்குள் நுழையவே பல மணி நேரம் ஆனது. மக்கள் கூட்டம் சாலையை ஆக்கிரமித்து நின்றதால், அவரது பயண வேகம் மிக மெதுவாக இருந்தது.
விஜய் தனது உரையின் தொடக்கத்தில், “தமிழன் தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கேப்டன் விஜயகாந்தின் பிரபலமான வசனத்தை குறிப்பிட்டு, அது நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளையின் வரிகள் என்றும் கூறினார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நாமக்கல்லில் நடந்த தனது பிரச்சாரத்தில், விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அ.தி.மு.க.வின் மீது நேரடி தாக்குதலை முதல்முறையாக தொடங்கினார். அவர், “ஜெயலலிதா மேடத்தை அம்மா என்று கூறிக் கொண்டு, அவர்கள் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். இதன் மூலம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என திட்டவட்டமாக அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி மட்டுமே அவருக்கு உள்ள ஒரே வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள் கருத்துப்படி, விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சி இணையும் பட்சத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும்.
விஜய்க்கு 51 வயதும், ராகுல் காந்திக்கு 55 வயதும் ஆவதால், இருவருக்கும் இடையேயான வயது மற்றும் சிந்தனை பொருத்தம் இந்த கூட்டணியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் விஜய்யிடம் கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுவதும் இந்த பரபரப்பை அதிகரித்துள்ளது.
அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் விஜய்-காங்கிரஸ் கூட்டணி என தமிழக அரசியல் மும்முனை போட்டியாக மாறும் நிலை உள்ளது. இதனால் விஜய், மற்ற கட்சிகளின் வாக்குகளை பிரிப்பதோடு, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியையும் பெறுவதால் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
