திருச்சி மற்றும் நாகப்பட்டினத்தை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பிரச்சார பயணத்தை நாமக்கல்லில் மேற்கொண்டார். அரசியல் ஜாம்பவானான செந்தில் பாலாஜியின் கோட்டையான கரூருக்கு அவர் பயணம் செய்வதற்கு முன்பு, நாமக்கல்லில் மக்கள் மத்தியில் அவர் நிகழ்த்திய உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கரூர், அரசியல் ரீதியாக செந்தில் பாலாஜியின் பலமான கோட்டையாக கருதப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் செந்தில் பாலாஜிக்கும் நடந்த அரசியல் மோதல்களில், பாலாஜி தனது பணபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி அண்ணாமலையை முறியடித்தார். அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த அவர், மூத்த தலைவர்களை தாண்டி முதல்வருக்கு நெருக்கமான இடத்தைப் பிடித்தது அவரது திறமைக்கு சான்று. அப்படிப்பட்ட கரூருக்கு விஜய் செல்லும்போது, அவருக்கு மக்கள் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால், அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கி, நாமக்கல்லில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.
விஜய் திருச்சிக்கு வந்ததிலிருந்து, நாமக்கல் வரை சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் அலைகடலெனத் திரண்டது. காலை முதல் காத்திருந்த மக்களிடம், அரசியல் ஆர்வம் என்பதை தாண்டி, ஒரு பெரிய நடிகரை நேரில் காணும் உற்சாகமே அதிகமாக இருந்தது. அவர்களின் பேச்சிலும், முகத்திலும் ஒரு பண்டிகைக்குரிய பரவசம் வெளிப்பட்டது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்கள் கூட்டம் ஏராளமாக இருந்தது. விஜய் வாகனத்தின் கதவு திறக்கும்போதும், அவர் மேடைக்கு வரும்போதும் மக்கள் கூட்டம் எழுப்பிய ஆரவாரமே அவரது செல்வாக்கை காட்டியது.
நாமக்கல்லில் மைக் பிடித்த விஜய், கடந்த பயணங்களை போலவே அரசியல் கருத்துக்களை முன்வைத்தார். அவர் தனது உரையில், நாமக்கல்லின் முக்கிய பிரச்சனையான முட்டை சேமிப்பு கிடங்கு மற்றும் கிட்னி திருட்டு விவகாரம் குறித்துப் பேசினார். இது உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை அவர் கவனத்தில் கொண்டதை காட்டுகிறது. அதேவேளையில், அவர் தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவின் பொய்யான வாக்குறுதிகள் குறித்தும், பா.ஜ.க.வுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்தார். அ.தி.மு.க. குறித்தும் விமர்சனம் செய்தார். இது, அ.தி.மு.க.-விஜய் கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய் தனது பேச்சில், “மூன்று வாரங்களுக்கு முன்பு நான் நினைத்தது வேறு; இப்போது என் எண்ணமே வேறு. ஒரு கை பார்த்துவிடலாம்” என்று நம்பிக்கையுடன் கூறினார். இதற்கு முக்கிய காரணம், அவர் செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டம் மற்றும் அவரது குழுவினர் எடுக்கும் சர்வேக்கள். குறிப்பாக நாமக்கல்லில் பேசுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவரது கைக்கு வந்த சர்வேயால் அவர் உற்சாகமானதாக கூறப்படுகிறது. தனது பேச்சுகளில் கற்பனைக்கு பொருந்தாத விஷயங்களை சொல்வதற்கு பதிலாக, யதார்த்தமான பிரச்சனைகளை பேசுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தனது பயணத்தின்போது தொண்டர்கள் பரிசாக அளித்த வேலை பெற்று கொண்டார். அத்துடன், அவர் அஜித்துடன் இணைந்து நடித்த ஒரே திரைப்படத்தின் படத்தை ரசிகர் ஒருவர் வழங்கியபோது, அதை வாங்கி கையெழுத்திட்டதோடு, அதை புகைப்படம் எடுக்க சொன்னார். இது, வரவிருக்கும் காலங்களில் அஜித்துடனான சந்திப்புக்கான சாத்தியக்கூறுகளை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
