அரசு விழாக்களில் சினிமா நட்சத்திரங்களும், அரசியல் சார்பு ஊடகங்களும் ஒருசேர மேடையேறுவது என்பது அரிதான நிகழ்வு. ஆனால், தமிழக அரசின் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி, கல்வித் துறையின் சாதனைகளை பேசுகிறதா, அல்லது ஆளும் கட்சியின் பிம்பத்தை உயர்த்துவதற்காக நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டம், ‘புதுமைப் பெண்’ திட்டம் போன்ற மகத்தான கல்வி முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது. கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், உயர்கல்வியை ஊக்குவிக்கவும் இந்த திட்டங்கள் உதவியுள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த சாதனைகளை கொண்டாடும் விதமாக, அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழா, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிகழ்வு, தமிழக அரசின் சொந்த செலவில் நடத்தப்பட்ட ஒரு விழா. நடிகர் சூர்யாவின் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ போன்ற தனிப்பட்ட அமைப்புகள், தங்கள் சொந்தப் பணத்தில் கல்விக்கு செலவு செய்து, மாணவர்களை பாராட்டும் அதேசமயம், அரசு ஒரு விழாவை நடத்தும்போது, அதில் சினிமா பிரமுகர்களையும் ஊடகவியலாளர்களையும் ஏன் முக்கிய விருந்தினர்களாக அழைக்க வேண்டும்?
கல்வி விழாவுக்கு கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர்கள் போன்றோரை அழைப்பதே முறையாக இருக்கும். ஆனால், இந்த விழாவில் பல இயக்குநர்களும் நடிகர்களும் மேடையேறி பேசினர். கல்வி திட்டங்களில் இவர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை.
நீதிபதி சந்துரு போன்ற கல்வியாளர்கள் பேசும்போது, ஒரு நடிகர் உள்ளே வந்தவுடன் ஒட்டுமொத்த அரங்கமும் அந்த நடிகரின் பக்கம் திரும்பியது. இது மேடையில் இருந்த கல்விமான்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். இது போன்ற நிகழ்ச்சிகளில் சுயமரியாதை உள்ள அறிவுஜீவிகள் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? எந்தவொரு திட்டத்திலும் நேரடியாக பங்கெடுக்காத சினிமாக்காரர்களை அழைப்பது, மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு கவர்ச்சி யுக்தியாக மட்டுமே பார்க்க முடிகிறது. இது திரையுலக பிரபலங்களை பயன்படுத்தி, அரசின் சாதனைகளை பிரபலப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே தெரிகிறது.
இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களை தவிர, பல மூத்த ஊடகவியலாளர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் விருந்தினர்களாக மேடையில் அமர்ந்திருந்தனர். அரசாங்கத்திற்கும் ஊடகத்திற்கும் இடையே எப்போதும் ஒரு ஆரோக்கியமான இடைவெளி அல்லது உரசல் இருக்க வேண்டும். அதுவே ஜனநாயகத்திற்கும் ஊடகத்தின் நம்பகத்தன்மைக்கும் நல்லது என்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி.
துரதிர்ஷ்டவசமாக, இங்கு அந்த எல்லைக்கோடு மங்கலாகிவிட்டது. ஊடகவியலாளர்களை விருந்தினர்களாக அழைத்து, அரசின் நண்பர்களாக காட்டுவதன் மூலம், எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு அரசியல்வாதி ஒரு பத்திரிகையாளனை “ரொம்ப நல்லவன்” என்று சொன்னால், அந்த பத்திரிகையாளர் சமரசம் செய்து கொண்டார் என்று பொருள் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் குறிப்பிட்டது இங்கு கவனிக்கத்தக்கது.
இன்றைய நிலையில், தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களை நேரிடையாகச் சந்தித்து பேசுவதை தவிர்த்து வருகிறார். கலைஞரின் ஆட்சிக்காலத்திலும், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் கூட, பத்திரிகையாளர் சந்திப்புகள் வழக்கமான நிகழ்வுகளாக இருந்தன. ஆனால், இப்போது, விமான நிலையத்தில் சில கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற எதேச்சையான சந்திப்புகள் மட்டுமே நடக்கின்றன.
ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில், அரசு தனது சாதனைகள் குறித்துப்பேசுவது மட்டுமல்ல, ஊடகங்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். ஆனால், அரசு விருந்தினர்களாக அழைக்கப்படும் ஊடகவியலாளர்கள், அரசின் சாதனைகளுக்கு ஆலோசனை வழங்கத் தயார். ஆனால், அரசின் தோல்விகள் குறித்தோ, அதன் அணுகுமுறைகள் குறித்தோ கேள்வி கேட்க தயாரா? இது ஊடகத்தின் உண்மையான பணியை விட்டு விலகி, அரசின் ஒரு அங்கமாக செயல்படுவதை காட்டுகிறது.
இந்த விழா, திராவிட கட்சிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கல்வி துறையில் ஆற்றிய சாதனைகளை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும், அரசுதான் மாணவர்களுக்கு இலவச உணவு, சைக்கிள், பண உதவி போன்றவற்றை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது என்பது, கல்வி தரத்தின் மீது ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது.
“நாங்கள் கல்வி கொடுத்தோம்” என்று அரசு கூறுகிறது. ஆனால், அந்த கல்வியின் தரம் என்ன? அது மாணவர்கள் வறுமையிலிருந்து மீண்டு வர உதவியிருக்கிறதா? உயர்கல்வி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்களா? இந்த விவாதங்களுக்கு பதிலாக, ஒரு கல்வி விழாவை சினிமாக்காரர்களை வைத்து நடத்தும்போது, அதன் உண்மையான நோக்கம் திசை மாறுகிறது. இது, அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதற்கான ஒரு யுக்தியாகவே இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
