2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதிருந்தே பரபரப்பாகியுள்ளது. ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணிகளில், ஒவ்வொரு கட்சியும் தங்களின் தேர்தல் வியூகங்களையும், தனிப்பட்ட கனவுகளையும் கொண்டிருக்கின்றன. தற்போதுள்ள அரசியல் சூழலில், யாருக்கு என்ன ஆசை, என்ன நடக்கும் என்பது குறித்த ஒரு பார்வை இதோ.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த விஜயகாந்தின் கனவை நிறைவேற்ற போராடி வருகிறார். 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையை மாற்றி, எப்படியாவது ஒன்றிரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளது. அவரது மகனான விஜய பிரபாகரன், கடந்த மக்களவை தேர்தலில் கடும் போட்டி கொடுத்தது, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியில் நடைபெறவுள்ள மாநாடு, கட்சியின் எதிர்கால பாதையைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சிக்கான தனித்தன்மையை நிலைநிறுத்த விரும்புகிறார். திமுகவுடன் கூட்டணி அமைத்து, அதன் சின்னத்தில் போட்டியிட்டாலும், கட்சிக்கு என தனியான ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு உண்டு. நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அங்கீகாரம் பெற்றுவிட்ட நிலையில், தங்கள் கட்சிக்கும் ஒரு அங்கீகாரம் வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆகவே, 2026 தேர்தலில் எப்படியாவது சொந்த சின்னத்தில் போட்டியிட்டு, தங்கள் கட்சிக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் நோக்கம், தனது கட்சியின் வாக்கு சதவீதத்தை தக்கவைத்துக்கொள்வதுதான். கடந்த தேர்தல்களில் சுமார் 8% வாக்குகளை பெற்று, ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாமலேயே அங்கீகாரம் பெற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்தது. தற்போது விஜய்யின் வருகை, சீமானின் வாக்கு வங்கியை பாதிக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, வாக்கு சதவீதத்தை 10% ஆக உயர்த்தி காட்ட வேண்டும் என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். விஜய்யின் அரசியல் வருகை, அவருக்கு போட்டியாக அமையும் என்பதால், இருவரும் தனித்து நின்று தங்களின் பலத்தை காட்ட முனைவார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முதல் குறி, முதல் தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று, ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பது தான் நோக்கம். அவர் நடத்தும் கூட்டங்களுக்குக் குவியும் மக்கள் கூட்டம், இந்த கனவை நனவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுகிறது. சரியான கூட்டணி அமைந்தால் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு உண்டு.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக வரக் கூடாது என்பதே அவரது ஒரே நோக்கம். தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதா, புதிய கூட்டணியை உருவாக்குவதா என்பதை பற்றி யோசிக்காமல், எடப்பாடியை எதிர்ப்பதில் அவர் தெளிவாக உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் எண்ணமும் டிடிவி தினகரனை ஒத்ததே. அதிமுகவில் தனக்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது கட்சிக்கு கூடுதல் இடங்களை பெற்று, தமிழக அரசியலில் மூன்றாவது பெரிய கட்சியாக நிலைநிறுத்த விரும்புகிறார். கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜகவை விடவும் விசிகவை பெரிய கட்சியாக நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவரது கனவாக உள்ளது.
பாஜகவின் மாநிலத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், 2026 தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை பெற வேண்டும் என எதிர்பார்க்கிறார். கடந்த தேர்தலில் பெற்ற 4 இடங்களை மூன்று மடங்காக உயர்த்தி, 12 இடங்களைப் பெற்று, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணியை தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். கூட்டணித் தொடர வேண்டும் என டெல்லி தலைமையிடமும் அவர் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் அவரது கட்சியில் உள்ள பலர் விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ஓபிஎஸ், தினகரன் போன்றோர் ஏற்படுத்தும் சவால்களை எதிர்கொண்டு, கட்சிக்குள் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதே அவரது முதல் நோக்கம். தேர்தலில் வெற்றி பெறுவது, முதலமைச்சராவது எல்லாம் அவருக்கு இரண்டாவது தான்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 தேர்தலிலும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். திமுக இதுவரை தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்ததில்லை என்ற வரலாற்றை மாற்றி, மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவரது இலக்கு. இதற்காக, மக்கள் நலத் திட்டங்களை வலுப்படுத்தி, கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்புகளை அமைதியாகக் கையாண்டு வருகிறார்.
ஒவ்வொரு கட்சியின் தலைவர்களுக்கும் ஒவ்வொரு எண்ணம் இருந்தாலும் மக்கள் மனதில் என்ன இருக்கிறதோ, அதுதான் நடக்கும். தற்போதைய அரசியல் நிலைப்படி மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். திராவிட கட்சியின் ஆட்சி போதும் என்ற முடிவுக்கு பலர் வந்துவிட்டனர். விஜய்யை முதல்வராக பார்க்க பலர் விரும்புகின்றனர். எனவே அரசியல் விமர்சகர்களின் கணிப்பின்படி இந்த தேர்தல் திமுக – தவெக இடையே தான் போட்டி இருக்கும். தேர்தல் முடிவுக்கு பின் சின்னச்சின்ன கட்சிகள் காணாமல் போய்விடும். அதிமுகவும் தனது பலத்தை பெருமளவு இழக்கும் என்று கூறுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
