2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஏற்கனவே தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு பிரதான அரசியல் சக்திகள் களத்தில் இருக்கும் நிலையில், புதிய கூட்டணி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதா என்ற விவாதங்கள் பரவலாக எழுந்துள்ளன. முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு புதிய அணி உருவாகக்கூடுமா என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை, தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளார். செய்தியாளர்கள் “நீங்கள் தனிக்கட்சி தொடங்கப் போகிறீர்களா?” என்று கேட்டபோது, “தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்,” என்று அவர் அளித்த பதில், அந்த வாய்ப்பை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. சமீபத்தில் அவர் டிடிவி தினகரனை சந்தித்தது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக ஒரு புதிய அணி அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அண்ணாமலைக்கு ஆதரவான ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டபோது, குறிப்பிட்ட சில தொகுதிகளில் பெற்ற வாக்குகள், அண்ணாமலை மீது தனிப்பட்ட முறையில் பற்றுதல் கொண்ட வாக்காளர்களின் வாக்குகளாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த வாக்குகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு மாற்றுவது சவாலானது என்பதால், அண்ணாமலை தனது சொந்த பலத்தை நிரூபிக்கும் ஒரு முயற்சியில் ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லாமல் ஒரு புதிய தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதே டிடிவி தினகரனின் நிலைப்பாடாக உள்ளது. கடந்த மக்களவை தேர்தலிலும் அவர் தனித்து போட்டியிட்டார். அண்ணாமலையுடன் அவர் நடத்திய சந்திப்பு, எடப்பாடிக்கு எதிரான பொதுவான நிலைப்பாடு கொண்ட தலைவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பி.எஸ், அ.ம.மு.க மற்றும் பாஜகவுடன் இணைந்து ஒரு புதிய அணியை உருவாக்குவாரா அல்லது தி.மு.க கூட்டணியில் பயணிப்பாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்தை ஏற்கெனவே கைவிட்டுவிட்டதாக அறிவித்துவிட்டார். ஆனாலும், தமிழக அரசியலில் அவரது நிலைப்பாடு தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. சிலர் அவர் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதாகவும், சில அரசியல் நகர்வுகளுக்கு அவர் காரணமாக இருப்பதாகவும் பேசுகின்றனர். இருப்பினும், அவர் நேரடியாக அரசியல் கட்சி தொடங்கி, ஒரு புதிய அணிக்கு தலைமை தாங்குவார் என்பதற்கான எந்த ஆதாரபூர்வமான தகவலும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பித்தால் அவருக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிய பா.ம.க மற்றும் தே.மு.தி.க போன்ற கட்சிகள் இந்த புதிய அணியில் இணையுமா என்பதும் முக்கியமான கேள்வி. இந்த கட்சிகள் தங்களின் தேர்தல் நிலைப்பாட்டை இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை. அவர்கள் தங்களின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு கூட்டணியையே விரும்புவார்கள். எனவே, அண்ணாமலை, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை உள்ளடக்கிய ஒரு புதிய அணி உருவாகும் பட்சத்தில், அவர்கள் பா.ம.க மற்றும் தே.மு.தி.க கட்சிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சி செய்யலாம்.
இருப்பினும், இந்த சாத்தியங்கள் அனைத்தும் தற்போதைக்கு ஊகங்களின் அடிப்படையிலேயே உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால், எந்தவொரு கூட்டணியும் இறுதியாக்கப்படவில்லை. தனிப்பட்ட தலைவர்களின் சொந்த நலன்களும், தேசிய கட்சிகளின் வியூகங்களும், தமிழக அரசியல் களத்தில் அடுத்த சில மாதங்களில் பெரும் மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
