நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் புதிய அலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, தனது சுற்றுப்பயணங்களை திமுகவின் முக்கிய கோட்டைகளாக கருதப்படும் பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்வது, அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
திருச்சியில் தொடங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் தனது செல்வாக்கை நிலைநாட்டிய விஜய், தற்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையான கரூரை குறிவைத்திருப்பது, அவரது அரசியல் வியூகத்தின் ஆழத்தை காட்டுகிறது.
விஜய் தனது சுற்றுப்பயணங்களை திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற திமுகவின் வலுவான பகுதிகளில் ஆரம்பித்தது, ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இது திமுகவின் கோட்டைகளை அசைத்து பார்க்கும் ஒரு திட்டமிட்ட முயற்சி. திருச்சியில் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்ற சக்திவாய்ந்த அமைச்சர்களின் பிடி இறுக்கமாக இருக்கும் பகுதியில், விஜய்யின் கூட்டம் எதிர்பாராத வகையில் திரண்டது, அவரது ஆரம்பகால வெற்றியாக கருதப்படுகிறது. திருவாரூரில் கருணாநிதியின் சொந்த மண்ணில் கூட்டம் கூட்டியது, திமுகவுக்கு ஒரு நேரடி சவாலாகவே பார்க்கப்பட்டது.
அடுத்தகட்டமாக விஜய் ரசிகர்கள், “செந்தில் பாலாஜியின் கோட்டையில் விஜய் கொடி நாட்ட போகிறார்” என்று உற்சாகமாக பேசிவருகின்றனர். கரூரில் திமுக சமீபத்தில் நடத்திய முப்பெரும் விழாவுக்கு கூடிய கூட்டத்துடன், விஜய்யின் கூட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவரது செல்வாக்கு நிரூபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இந்த கரூர் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதும் ஒரு பரபரப்பான திருப்பமாக அமைந்தது. அதே நாளில், பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் கரூர் பயணத்திற்கு அனுமதி கோரியதாகவும், அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதால், விஜய்யின் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்ச் சூழலில், அன்புமணி ராமதாஸ் தனது பயணத்தை ஒரு நாள் ஒத்திவைத்து, விஜய்க்கு வழிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, திமுக சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவு ஊடகங்கள் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி தனிப்பட்ட முறையில் அவதூறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
அரசியல் விமர்சகர்கள் இது ஒரு அருவருப்பான அணுகுமுறை என்று கண்டிக்கின்றனர். இந்த தாக்குதல்கள், எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், வைகோ, கமல்ஹாசன் போன்றோர் அரசியல் களத்திற்கு வந்தபோது, திமுக கையாண்ட அதே பாணியின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. எதிராளியை நேரடியாக எதிர்கொள்ள முடியாதபோது, தனிப்பட்ட வாழ்க்கையை ஆயுதமாக பயன்படுத்துவது திமுகவின் பாரம்பரியமாக மாறியுள்ளது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கரு.பழனியப்பன் போன்ற திமுக ஆதரவாளர்களின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யும் விரைவில் தங்கள் கூட்டணியில் சேர்வார், அவருக்கும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்போம் என்று அவர் பேசியது விஜய்யை அவமதித்ததாக நினைத்து கமல்ஹாசனை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கமல் கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய், திமுகவின் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நேரடியாக பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இதை ஒரு பலமாகவே பார்க்கின்றனர். “விஜய்யின் அமைதியை கோழைத்தனம் என்று நினைத்தால், திமுகவினர் ஏமாந்து போவார்கள்” என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய்க்கு எதிராக ஊழல் அல்லது மக்கள் பணத்தை கொள்ளையடித்தது போன்ற குற்றச்சாட்டுகளை திமுகவால் முன்வைக்க முடியாது. எனவே, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமே ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இது பெண்களின் கோபத்தை திமுக மீது திருப்பிவிடும் என்றும், விஜய்க்கு உள்ள பெண்கள் செல்வாக்கை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
மொத்தத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கோட்டைகளை தேர்ந்தெடுத்து, தனது பலத்தை நிரூபிக்கும் அவரது வியூகம், திமுகவுக்கு ஒரு பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. அதேநேரம், தனிப்பட்ட தாக்குதல்களை தாண்டி, மக்கள் நலன் சார்ந்த ஆழமான பிரச்சினைகளை விஜய் கையில் எடுப்பது, அவரது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
