செங்கோட்டையன் – டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு.. அதிமுகவின் குழப்பம் விஜய்க்கு லாபமா? திமுகவை தோற்கடிக்க பிளவுபட்ட அதிமுகவால் முடியாது என மக்கள் நம்ப தொடங்கிவிட்டனர்.. விஜய் சொன்ந்து போல் திமுக – தவெக இடையே தான் போட்டி.. போர் ஆரம்பம்..!

அ.தி.மு.க.வில் ஒற்றுமைக்கான சாத்தியக்கூறுகள் முழுவதுமாக சாத்தியம் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக்கு…

admk tvk

அ.தி.மு.க.வில் ஒற்றுமைக்கான சாத்தியக்கூறுகள் முழுவதுமாக சாத்தியம் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு கட்சிக்குள் ஒரு புதிய பிளவை உண்டாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

செங்கோட்டையனின் இந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்க முடியாது. ஏனெனில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த தினகரன், எடப்பாடி பழனிசாமிக்கு வெளிப்படையான சவாலை விடுத்து வருகிறார். “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அ.தி.மு.க. – பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை” என்று தினகரன் அண்மையில் கூறியிருந்தார். இதற்கு பிறகு, செங்கோட்டையன் அவரை சந்தித்திருப்பது, நேரடியாக எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையன், பாஜகவின் டெல்லி தலைமையுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்திருப்பதை அவரே உறுதி செய்துள்ளார். இது, செங்கோட்டையனின் நடவடிக்கை, பாஜகவின் மறைமுக ஆசீர்வாதத்துடன் நடைபெற்றுள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்த பிறகு, இந்த சந்திப்புகள் நடந்திருப்பது, பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பாஜக, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில், சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வால் அது சாத்தியமில்லை என்பது பாஜகவின் எண்ணம். இதனால், ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வுடன் இணைக்க பாஜக விரும்புகிறது.

ஆனால் பாஜகவின் இந்த ஒருங்கிணைப்பு கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுக்கிறார். இது, பாஜகவின் வியூகங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. எடப்பாடியை வழிக்கு கொண்டுவர, பாஜக மறைமுகமாக பல வியூகங்களை வகுத்து வருகிறது. செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் மூலம், எடப்பாடியின் தலைமைக்கு எதிராக அழுத்தத்தை உருவாக்குவது இதன் ஒரு பகுதியாக இருக்கலாம்.

உள்கட்சிப் பூசலால் அ.தி.மு.க. பலவீனமடைந்திருக்கும் நிலையில், திமுகவை தோற்கடிக்க விஜய்யால் மட்டுமே முடியும் என அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி மக்களும் நம்ப தொடங்கிவிட்டனர். எனவே திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் விஜய்க்கு செல்ல வாய்ப்பு உண்டு.

அ.தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு தலைவரும், ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா என அனைவரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களால், பாஜகவின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட முடியாது. பாஜக, அ.தி.மு.க.வை பலவீனமான நிலையில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறது. எடப்பாடி தனியாக அதிகாரத்தை குவிப்பதை பாஜக விரும்பவில்லை. அதேநேரத்தில், எடப்பாடியை முற்றிலுமாக புறக்கணிப்பதும் பாஜகவுக்கு கடினமானதே.

மொத்தத்தில், அ.தி.மு.க. ஒன்றுபடவில்லை என்றால், அதன் தோல்வி நிச்சயம் என்றும், அதுவே அதிமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.