திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் நடத்திய எம்.பி.க்கள் கூட்டமும், அவரது பல்வேறு கருத்துகளும் தமிழக அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அவரது செயல்பாடுகள் குறித்து அரசியல் நோக்கர்கள் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
பொதுவாக, தேர்தலுக்கான பணிகளை பற்றி பேசும்போது, மாவட்ட செயலாளர்களையே தலைவர்கள் அழைப்பார்கள். ஆனால், ஸ்டாலின் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதற்கு காரணம், மத்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் பட்டியலை நடைமுறைப்படுத்த தயாராக இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது தி.மு.க. தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக, போலியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்பட்டால், அது தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது என்றும், நேதாஜி மக்கள் கட்சியின் தலைவர் வரதராஜ் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலின் எம்.பி.க்களுக்கு டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்காமல் இருக்கவும், ஒவ்வொரு வாக்காளரையும் கண்காணிக்கவும் ஒவ்வொரு பூத்துக்கும் நான்கு தி.மு.க. தொண்டர்களை நியமித்து, அவர்களுக்கு பணமும் பிற பொருட்களும் வழங்கப்படுவதாகவும் வரதராஜ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் விஜய்க்கு கூடும் கூட்டம் திமுகவுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பீகாரை போல் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் வாக்காளர்களை நீக்கினால் என்ன செய்வது என்ற பயமும் உள்ளது.இவற்றையெல்லாம் சமாளித்து திமுக எப்படி தேர்தல் என்னும் கரையை கடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
