தமிழக அரசு உருவாக்கியுள்ள “TN FACT CHECK” பிரிவு குறித்து ராஜமோகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஒரு அரசாங்கம் தனக்குத்தானே உண்மை சரிபார்ப்பு அமைப்பு உருவாக்குவது உலக வரலாற்றில் ஒரு புதுமை என்றார். “இது TN FACT CHECK அல்ல, இது TN FAKE CHECK என்று அவர் குற்றம் சாட்டினார். அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும், எதிர்க்கருத்துகளை மழுங்கடிக்கவும் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுவதாக அவர் சாடினார்.
விஜய், நாகப்பட்டினத்தில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரியதற்கு, அங்கு ஏற்கெனவே மீனவ கல்லூரி இருப்பதாக அரசு தரப்பு பதிலளித்தது. இதற்கு ராஜமோகன் பதிலளிக்கையில், “மீனவக் கல்லூரி என்பது மீன் வளர்ப்பு மற்றும் இறால் பண்ணைகள் பற்றியது. ஆனால், கடல்சார் பல்கலைக்கழகம் என்பது கப்பல் கட்டுமானம், கடல்வழி போக்குவரத்து, தொழில்நுட்பம் போன்ற முற்றிலும் வேறுபட்ட துறை. இந்த அடிப்படை வித்தியாசம் கூட தெரியாமல் அரசு தரப்பு மக்களை திசை திருப்புகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல்” என்று கடுமையாக விமர்சித்தார்.
நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் அறிக்கையை சுட்டிக்காட்டினார். மொத்தமுள்ள 233 பணியிடங்களில் 113 இடங்கள் காலியாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த பிரச்சனை குறித்து விஜய் பேசியபோது, ஆளுங்கட்சியினர் அவரை அவதூறாக பேசியது ஏன் என்று ராஜமோகன் கேள்வி எழுப்பினார். “மக்கள் நலன் சார்ந்து பேசுவதே அரசியல். ஆனால், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையை செய்யாமல், உண்மை பேசுபவர்களை வசைபாடுகிறார்கள்” என்று அவர் சாடினார்.
திருவாரூர் கூட்டத்தில் விஜய்க்கு ஜேசிபி மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்ததற்காக, அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை ராஜமோகன் கண்டித்தார். “ஜேசிபியில் மாலை அணிவிப்பது குற்றம் என்றால், ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், பிரபாகர் ராஜா, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு ஜேசிபி மூலம் மாலை அணிவிக்கப்பட்டபோது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார். இது ஒருதலைபட்சமானது என்றும், இதுதான் பாசிசம் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஆளூர் ஷானவாஸ் போன்றோர் விஜய்யை ஒருமையில் பேசியதையும், அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதையும் ராஜமோகன் கடுமையாக விமர்சித்தார். “கூத்தாடி என்ற வார்த்தையை ஒரு மக்கள் பிரதிநிதி பயன்படுத்தலாமா? கலைஞர் குடும்பத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்கள் இல்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். அரசியல் நாகரீகம் குறைந்து வருவதாகவும், இது ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றியதாக கூறப்படுவது பொய் என்றார். சட்டமன்றத்தில் அறிவித்த 256 திட்டங்களை கூட நிறைவேற்ற முடியாத நிலையில், மக்களை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறார்கள் என்று அவர் கூறினார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கப்படுவதை, திமுகவின் மாவட்டச் செயலாளரே ஒப்புக்கொண்டதைக் குறிப்பிட்டு, “இது வெட்கக்கேடான செயல்” என்று ராஜமோகன் சாடினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
