திரைத்துறையிலிருந்து அரசியல் களம் புகுந்திருக்கும் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு அசைவும் இன்று சமூக ஊடகங்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் தனது கட்சியின் அரசியல் பயணத்தை தொடங்கியதில் இருந்து, சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் நாகை, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு, அவருக்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன.
திரைத்துறையில் இருந்து அரசியல் தலைவர்கள் வரும்போது, அவர்களின் ரசிகர் கூட்டம் ஓட்டுகளாக மாறுமா என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு. கமல்ஹாசன் போன்ற தலைவர்கள், பெரிய கூட்டங்கள் கூடுவதை மட்டும் வைத்து ஓட்டு கிடைத்துவிடாது என்று கருத்து தெரிவிக்கின்றனர். இது, தனது சொந்த அனுபவத்தில் இருந்து அவர் கூறியதாக பலர் கருதுகின்றனர்.
ஆனால், விஜய்யின் நிலைமை வேறுபடுகிறது. அவர் தனது இளமை பருவத்திலேயே அரசியலுக்கு வந்துவிட்டார். கமல்ஹாசன் மற்றும் ரஜினி காந்த் ஆகியோருக்கு ஏற்பட்டது போல, தாமதமான வருகை விஜய்க்கு இல்லை. விஜய்யின் பொதுக்கூட்டங்களில் ரசிகர்கள் கடும் வெயிலில், உணவு, நீர் கூட இல்லாமல் கூடுகின்றனர். இது வெறும் ரசிகர் கூட்டம் மட்டுமல்ல, ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுடைய போராட்ட குணத்தையும் காட்டுகிறது. ஒரு சினிமா நடிகருக்காக இவ்வளவு சிரமங்களை மக்கள் ஏற்று கொள்கிறார்கள் என்றால், அது ஓட்டுகளாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.
விஜய்யின் எழுச்சி ஆளும் கட்சிகளை பதட்டமடையச் செய்துள்ளது. ஆரம்பத்தில், அவரை ஒரு சினிமா நடிகர் என்று புறக்கணித்தவர்கள், இப்போது அவரது கூட்டத்தை கண்டு அஞ்சுகின்றனர். திமுகவை போன்ற கட்சிகள் பல பெரிய போராட்டங்களையும், சவால்களையும் கடந்தவை. இருப்பினும், விஜய்யின் ஆதரவு, குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில், அவர்களுக்கு ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
விஜய்யின் வருகையை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டவர்கள், இப்போது நிலைமையின் தீவிரத்தை புரிந்துள்ளனர். ஒரு நடிகராக இருந்து மக்கள் ஆதரவை பெறுபவர்கள், அரசியலில் நிலைத்து நிற்பது கடினம் என்பது கடந்த கால வரலாறு,. இதற்கு சிவாஜி கணேசன், சரத்குமார், டி ராஜேந்தர், பாக்யராஜ், விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சிறந்த உதாரணங்கள். ஆனால் இது விஜய்யின் விஷயத்தில் பொருந்துமா என்பது தேர்தல் நேரத்தில் தெரியவரும்.
எனினும், கமல்ஹாசன் போன்றோர் குறிப்பிட்டது போல, ஒரு அரசியல் தலைவர் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருங்கிவிட வாய்ப்புள்ளது. விஜயகாந்த், கமல்ஹாசன், அரசியல் கட்சி ஆரம்பித்தபோது எந்த பெரிய கட்சியும் அவர்களுடன் கூட்டணிக்கு முன்வரவில்லை. ஆனால் விஜய்யுடன் கூட்டணி சேர, அதிமுக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளே விரும்புகின்றன. விஜய்யும் தனது பலத்தை காட்டி, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளார். இது அவருடைய அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
விஜய் எதிர்காலத்தில் தனது அரசியல் பயணத்தில் நிலைத்து நிற்பாரா அல்லது பின்வாங்குவாரா என்பது அவரது நிலைப்பாடுகளை பொறுத்தது. சமூக ஊடகங்களில் அவரை பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். ஆனாலும், அவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு ஓட்டுகளாக மாறினால், அது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும். விஜய், தனது கொள்கைகளை தெளிவாக வெளிப்படுத்தி, மக்களுடைய நம்பிக்கையை பெற்றால், அவர் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவராக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
