இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் தான் இருக்கும். அதிலும் சமீபகாலமாக இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற வரலாறு நேற்றும் தொடர்ந்தது. இந்திய அணிக்கு சமமாக பாகிஸ்தான் நிற்க வேண்டுமென்றால், அது தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், இந்தியா தனது 50% திறமையை காட்டினால்கூட பாகிஸ்தானை எளிதாக வென்றுவிடும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
நேற்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டி, ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியாக இருந்த இந்த இரு அணிகளின் மோதல், இப்போது ஒருதலைப்பட்சமாக மாறிவிட்டதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியது. இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் சொதப்பலாக இருந்தபோதும், சல்மான் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக வீழ்த்தினர்.
தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மாவும் சுப்மன் கில்லும் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 172 ரன்கள் இலக்கை எளிதாக்கினர். அபிஷேக் 39 பந்துகளில் 74 ரன்களும், கில் 28 பந்துகளில் 47 ரன்களும் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 59 பந்துகளில் 105 ரன்கள் குவித்து, இந்திய வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர்.
இந்தப் போட்டியின் வெற்றிக்கு பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானுடனான போட்டியை பற்றி வெளிப்படையாக பேசினார். “என் பார்வையில், இரண்டு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி, அதில் 7-7 அல்லது 8-7 என்ற கணக்கில் இருந்தால், அதை ஒரு நல்ல போட்டி அல்லது போட்டித்தன்மை என்று கூறலாம். ஆனால், 13-0 அல்லது 10-1 என்ற கணக்கில் இருந்தால், இது ஒரு போட்டியே இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஹேண்ட்சேக் கொடுக்காத சர்ச்சை மற்றும் பாகிஸ்தான் அணியின் புறக்கணிப்பு நாடகம் போன்றவற்றால், இந்த ஆட்டம் மேலும் பரபரப்பானது. டாஸின்போதே சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலியுடன் கைகுலுக்க மறுத்தது மீண்டும் ஒருமுறை பதற்றத்தை ஏற்படுத்தியது.
போட்டியின்போது இந்த பதற்றம் வெளிப்படையாக தெரிந்தது. அபிஷேக் ஷர்மாவும் சுப்மன் கில்லும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுடன் வார்த்தை போரில் ஈடுபட்டனர். ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த பிறகு, அபிஷேக் அவரை சீண்டினார். சுப்மன் கில்லும் தனது பங்குக்கு ஷஹீனின் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளை அடித்து, “ஜா, பால் லேகர் ஆ” (“போய், பந்தை எடுத்து வா”) என்று கேலி செய்தார். இந்த வார்த்தைகள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை மேலும் எரிச்சலடைய செய்தது.
ஆட்ட நாயகன் விருதை வென்ற அபிஷேக் ஷர்மா, “அவர்கள் எந்த காரணமும் இல்லாமல் எங்களிடம் வம்புக்கு வந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை பதிலுக்கு தாக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்தார்.
கில்லும் அபிஷேக்கும் இணைந்து பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அபிஷேக் 24 பந்துகளில் அரைசதம் அடித்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கில் 47 ரன்களில் ஆட்டமிழந்தாலும், சாம்சன் சொதப்பிய நிலையில், திலக் வர்மா 19 பந்துகளில் 30 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.
முன்னதாக இந்தியாவின் பந்துவீச்சில் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டார். அவர் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஹ்ரான் மற்றும் சயீப் ஆயுப் ஆகியோரின் கூட்டணியை பிரித்து, பாகிஸ்தானை தடுமாற வைத்தார். இந்திய பந்துவீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தபோதும், முக்கிய வீரரான ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டையும் எடுக்காதது கவலை அளிப்பதாகவே உள்ளது.
இந்த போட்டியின் வெற்றி, இந்திய அணியின் பேட்டிங் வலிமையை நிரூபித்தாலும், பந்துவீச்சு துறையில் சில சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. வரும் புதன்கிழமை அன்று வங்காளதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
