இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை என்றாலும், அது விரைவில் நிறைவேறும் நிலையில் உள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்திய பிரதமர் மோடியுடன் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் கவுன்சில் புவிசார் பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் புவிசார் திசையை வழங்குவதால், கவுன்சில் தலைவர் நேரடியாக ஒரு நாட்டின் தலைவருடன் பேசுவது இதுவே முதல்முறை. இது இந்தியாவின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர ஈடுபாட்டை உணர்த்துகிறது.
இந்த சந்திப்பில் முக்கியமாக நான்கு விஷயங்கள் பேசப்பட்டன:
இங்கிலாந்து ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டு, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் இறுதி அல்லது நவம்பருக்குள் தயாராகிவிடும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு: பிப்ரவரியில் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கவுன்சில் மற்றும் ஆணையத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஒப்பந்தம் சரியான பாதையில் சென்றால் பிப்ரவரியில் கையெழுத்திடப்படும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆர்வம் காட்டி வருகிறது.
உக்ரைன் போரை தீர்க்க இந்தியாவின் நல்லெண்ண உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் நாடியுள்ளது. இதற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவில் நடத்தலாம் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்தார். அதன் தொடர்ச்சியாகவே, எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் புதினை சந்திக்க தான் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் நெருங்குவதைக் கண்ட அமெரிக்கா, அதன் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25% வர்த்தக வரிகளை நீக்க விரைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானால், அமெரிக்காவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால், அதுவும் இந்தியாவுடன் விரைந்து ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தால், சீனாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும். ஐரோப்பிய ஒன்றியத்தை தன் பக்கம் இழுக்க முயன்ற சீனாவின் முயற்சி தோல்வியடையும்.
அவசரப்பட வேண்டாம், சர்வதேச உறவுகளில் எதுவும் நிரந்தரமில்லை” என்ற இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறை இங்கு நிரூபணமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எதிராக இருப்பதாக ஒரு காலத்தில் பேசப்பட்ட நிலையில், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
ரஷ்யாவுடனான உறவு: இந்த புதிய உறவுகள் உருவாகும் வேளையில், ரஷ்யாவுடனான உறவையும் இந்தியா வலுவாகப் பேண வேண்டும். உக்ரைன் போர் ரஷ்யாவின் சம்மதமின்றி தீராது என்பதால், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு உறுதியாக இருக்க வேண்டும்.
சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் வகையில், இந்தியா தனது கொள்கைகளில் மாற்றம் செய்து வருகிறது. மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதியில் கவனம் செலுத்துவதன் மூலம், வர்த்தகப் பற்றாக்குறையை நிர்வகிக்க முடியும்.
IMC திட்டம், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா இடையே முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. காசா போர் முடிந்தவுடன், ஹைஃபா மற்றும் பைரஸ் இணைப்புகள் செயல்பட தொடங்கும். இது சவுதி அரேபியாவுக்கு ஒரு முக்கிய செல்வாக்கை அளிக்கிறது. சவுதி அரேபியாவின் மூலம், பாகிஸ்தானுக்கு இந்தியா நெருக்குதல் கொடுக்க முடியும்.
பாகிஸ்தானின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. பயங்கரவாத சம்பவங்கள், வெள்ளம், பொருளாதார நெருக்கடி என பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா பாகிஸ்தானை புறக்கணித்து, புதிய உலக ஒழுங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
“இந்தியா இல்லாமல் புதிய உலக ஒழுங்கு இல்லை” என்ற உண்மை தற்போது தெளிவாகி வருகிறது. இந்தியா புதிய சவால்களுக்கு ஏற்றவாறு தனது சிந்தனையையும், அணுகுமுறையையும் மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
