இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை… தளிகை இடுவது எப்படி?

பெருமாளை மார்கழி மாதத்தில் வழிபடுவது போல புரட்டாசி மாதத்திலும் சிறப்பாக வழிபடுவர். இந்த மாதத்தில் புதனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நாம் பெருமாளை வழிபடும்போது நமக்கு எல்லாவித இன்னல்களும் நீங்குகிறது. நமக்கு எல்லாவித நன்மைகளையும்,…

பெருமாளை மார்கழி மாதத்தில் வழிபடுவது போல புரட்டாசி மாதத்திலும் சிறப்பாக வழிபடுவர். இந்த மாதத்தில் புதனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நாம் பெருமாளை வழிபடும்போது நமக்கு எல்லாவித இன்னல்களும் நீங்குகிறது. நமக்கு எல்லாவித நன்மைகளையும், ஆற்றல்களையும் பெருமாள் நமக்குத் தருகிறார்.

அதனால் தான் ஆதிமுதலாக வழிபடக்கூடிய பெருமாள் வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 17ம் தேதி புரட்டாசி மாதம் பிறந்தது. இந்த ஆண்டு வெகுசிறப்பாகவே அமைந்துள்ளது புரட்டாசி மாதம். கிழமைகளில் மிக உயர்ந்தது புதன் கிழமை. அந்த வகையில் புதன்கிழமை ஏகாதசி திதியில் இந்த மாதம் பிறந்துள்ளது. புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளைக் கூட்டம் கூட்டமாக வந்து பக்தர்கள் வழிபடுவர். அன்றைய தினம் பெருமாள் கோவிலுக்குச் செல்வது சிறப்பு.

இந்த மாதம் முழுவதும் மகாலட்சுமி அருளோடு உங்களது அருளும் எனக்கு பரிபூரணமாகக் கிடைக்கணும்னு பெருமாளை வேண்டிக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு 5 சனிக்கிழமைகள் புரட்டாசி மாதம் வருகிறது. இன்று (20.9.2025) முதலாவது சனிக்கிழமை. அடுத்து 27.9.2025, 4.10.2025, 11.10.2025, 18.10.2025 ஆகிய நாள்களில் புரட்டாசி சனிக்கிழமை வருகிறது. முதல் வாரம் அல்லது நாலாவது வாரத்தில் தளிகை இடலாம். நடுவில் நவராத்திரி காலம் வருகிறது. கொலு வைப்பவர்கள் அப்போது வைத்துக் கொள்ளலாம். வாய்ப்புள்ளவர்கள் முதல் வாரமே தளிகை இட்டு பெருமாளை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

சாதம், சாம்பார், வடை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக வைத்தும் தளிகை இடலாம். நமக்கு வழக்கமாக இருப்பது போல செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் வைத்து தளிகை இடலாம். பெருமாள் உருவில் இந்த சாதத்தை வாழை இலை போட்டு தளிகை இடலாம். மதியம் 12.30 மணி முதல் 1.20 மணிக்குள் தளிகை இடலாம். இந்தப் பிரசாதத்தைத் தாராளமாக சாப்பிடலாம். வழக்கம்போல அன்றைய தினம் 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறப்பு.