அமெரிக்க இராணுவத்தின் படைகள் இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தின் சிட்டகாங் துறைமுக நகரில் சமீபத்தில் முகாமிட்டிருப்பது, அப்பகுதியில் பெரும் சர்வதேச அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், மியான்மரும் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
இந்த நகர்வு, தெற்காசியாவில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பு அதிகரிப்பதை குறிக்கிறது. பொதுவாக, இந்த பிராந்தியத்தில் வெளிநாட்டு படைகளின் நகர்வுகளை நாடுகள் மிகவும் நுணுக்கமாக கவனிக்கும். அமெரிக்க இராணுவம், இந்த படைகளை கூட்டுப்பயிற்சிகள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு பயிற்சிகளுக்காக அனுப்பியிருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது. சிட்டகாங் நகரிலுள்ள ஷா அமானத் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கியுள்ளன. இந்த நகரம் வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மர் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
ஆனால், இந்த படைகளின் எண்ணிக்கையும், அவை அனுப்பப்பட்ட காலமும் இந்தியா மற்றும் மியான்மரில் கவலையை அதிகரித்துள்ளன. இது அமெரிக்காவின் தனிப்பட்ட இராணுவ நகர்வு அல்ல. இது வங்காளதேசம் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் தொடர் பயிற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்த சூழலில், டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கம் என்ன? இந்தியா இதனால் கவலைப்பட வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வங்காளதேசத்தில் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடு அதிகரிப்பதை, பிராந்திய அதிகார சமநிலையில் ஏற்படும் மாற்றம் என்று இந்தியா பார்க்கிறது. குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவின் எல்லையோர பகுதிகள் மற்றும் இந்தியாவின் முக்கிய பகுதிகளை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி வழித்தடத்திற்கு அருகே இது நடைபெறுவது கவனிக்கத்தக்கது.
இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் மியான்மர், எந்தவொரு வெளிநாட்டு இராணுவ படையும் தங்கள் உள்நாட்டு இன மோதல்கள் மற்றும் எல்லை பாதுகாப்பில் தலையிடுவதை விரும்புவதில்லை.
அமெரிக்கப் படைகளின் வருகை, வழக்கமான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கானது என்றும், எந்தவொரு மூன்றாவது நாட்டையும் குறிவைக்கவில்லை என்றும் வங்காளதேசம் வலியுறுத்துகிறது. ஆனால், கடந்த ஆண்டு வங்காளதேசம் பெரிய அரசியல் குழப்பத்தை சந்தித்தது. மாணவர் போராட்டங்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற நிர்பந்தித்து, நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு வழிவகுத்தது. யூனுஸுக்கு அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகள் இருப்பதால், இந்த அரசியல் மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்த யூகங்கள் எழுந்தன. பல ஆய்வாளர்கள், ஷேக் ஹசீனாவை வீழ்த்துவதற்கு அமெரிக்கா உதவியதாக வாதிடுகின்றனர்.
அதன்பின்னர், இரு நாடுகளுக்குமிடையே தொடர் இராணுவ பயிற்சிகள் நடைபெற்று வருவது புருவங்களை உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில், வங்காளதேசம் சீன தயாரிப்பு ஜே10 போர் விமானங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. வங்காளதேசம் மற்றும் மியான்மரில் சீனாவும் துறைமுகங்களை கட்டி, வங்காள விரிகுடாவுக்கு அணுகலை பெற்று, கிழக்கு இந்திய பெருங்கடலில் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை, அதன் இலக்கு இதற்கு நேர்மாறானது: சீனாவின் நுழைவைத் தடுப்பது மற்றும் இந்தியாவின் நகர்வுகளை கண்காணிப்பது. இந்த இரண்டு வல்லரசுகளின் போட்டியில் சிக்கி, வங்கதேசம் ஒரு ஆபத்தான ஆட்டத்தை விளையாடி வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
