காஷ்மீரின் பகல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்த இந்திய ராணுவம், பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுமழை பொழிந்தது. லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஒன்பது முகாம்கள் இந்த தாக்குதலில் சிதைக்கப்பட்டன. இதில் மிக முக்கியமாக, சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரின் தலைமை முகாம் குறிவைத்து தாக்கப்பட்டதில், அவரது குடும்பத்தினர் 10 பேர் உட்பட பலர் உயிரிழந்தனர்.
மசூத் அசார் மட்டும் இந்த தாக்குதலில் இருந்து தப்பினான். தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்தில் மசூத் அசார் இல்லை என்பதால் அவன் தப்பியதாக கூறப்பட்டது. மசூத் அசார் குடும்பமே இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் மசூத் அசார் தரப்பு அதை உறுதி செய்யவில்லை. ஆனால் தற்போது மசூத் அசார் தளபதி ஒருவர் மேடையில் பேசியபோது, ‘நம் தலைவரின் குடும்பத்தையே இந்திய ராணுவம் கொன்றுவிட்டது’ என்று உணர்ச்சிபொங்க பேசிய பின்னர் தான், இந்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பமே பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார், இந்தியாவிற்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தியுள்ளான். 1994-ஆம் ஆண்டு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட இவன், ஐந்து ஆண்டுகள் இந்திய சிறையில் இருந்தான். ஆனால், 1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது, பயணிகளை மீட்கும் பொருட்டு இவனை விடுதலை செய்ய நேர்ந்தது.
விடுதலைக்கு பிறகு பாகிஸ்தான் சென்று, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை நிறுவி, 2001-ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற தாக்குதல், 2016-ல் பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019-ல் புல்வாமா தாக்குதல் உட்பட பல தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றினான்.
பாகிஸ்தானின் இரட்டை வேடம் மற்றும் இந்தியாவின் உளவு நடவடிக்கைகள்
பாகிஸ்தான், மசூத் அசாருக்குப் புகலிடம் அளித்து வருகிறது. ஆனால், சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று அது மறுத்து வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என்று பகிரங்கமாக மறுத்திருந்தார். ஆனால், நம் உளவுத்துறை மசூத் அசாரை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் ஸ்காட் என்ற இடத்திற்கு மாற்றியதை கண்டறிந்துள்ளது.
அங்கு, இயற்கைக் காட்சிகள் நிறைந்த பூங்காக்கள் மற்றும் அரசு விடுதிகள் கொண்ட ஒரு வளாகத்தில் அவன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். இந்த இடம், நம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து வெறும் 120 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ அவனை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, மசூத் அசாரின் கதை முடிவடையும் காலம் வெகு தொலைவில் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
