அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பிறகு, உலகெங்கிலும், குறிப்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அரசியல் பதட்டம் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில், வலதுசாரி தலைவர் டாமி ராபின்சன் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இத்தகைய நிகழ்வுகள், புலம்பெயர்ந்தோர் மீதான மனநிலையை மாற்றியமைத்து வருகின்றன. இது இந்தியர்கள் உட்பட ஐரோப்பாவில் வாழும் பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரியது. பிக் பென் முதல் வாட்டர்லூ நிலையம் வரை நீண்ட இந்த ஊர்வலத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுக்கு டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகரான சார்லி கிர்க் மற்றும் எலான் மஸ்க் போன்ற உலக தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். எலான் மஸ்க், “வன்முறை உங்களை நோக்கி வருகிறது; சண்டையிடுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்” என்று நேரடியாகவே மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் பேசினார். இந்த வார்த்தைகள், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மனநிலையை தெளிவாக பிரதிபலிக்கிறது.
போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பதாகைகள், “எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும்”, “படகு பயணிகளை நிறுத்துங்கள்” போன்ற வாசகங்களைக்கொண்டிருந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை இவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த மனநிலை, “கிரேட் ரீப்ளேஸ்மென்ட் தியரி” என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஐரோப்பிய மக்கள் தங்கள் பூர்வீக நிலத்தை புலம்பெயர்ந்தவர்களிடம் இழந்து வருகின்றனர் என்ற அச்சமே இதன் மையக்கருத்து.
பொதுவாக, பிரிட்டனில் இந்தியர்கள், வங்கதேசத்தினர் மற்றும் பாகிஸ்தானியர்களுடன் சேர்த்து “தெற்கு ஆசியர்கள்” என்ற ஒரே பிரிவில் பார்க்கப்படுகின்றனர். பாகிஸ்தானியர்களும் வங்கதேசத்தவர்களும் பிரிட்டனில் மதிப்பை பெறுவதற்காக தங்களை இந்தியர்கள் என்று அடையாளப்படுத்துவதுண்டு. இதன் காரணமாக, புலம்பெயர்ந்தோர் மீதான எந்தவொரு விரோத போக்கிற்கும் இந்தியர்கள் “கூடுதல் பாதிப்பு” அடைகிறார்கள். சமீபத்தில், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 50,000 இந்தியர்களுக்கு விசா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த எதிர்ப்பு உணர்வுகள் இந்தியர்களுக்கு ஒரு பின்னடைவாக அமையக்கூடும்.
இந்த வலதுசாரி எழுச்சி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வரும் ஆண்டுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களில், வலதுசாரிகள் பெரும் வெற்றிபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியலில் நடக்கும் இந்த மாற்றங்கள், உலக அரசியலில் ஒரு புதிய திசையை உருவாக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
