ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி வீழ்த்திய இந்தியா; கைகொடுக்க மறுத்த கேப்டன்..வழக்கம்போல் செம்ம அடி வாங்கிய பாகிஸ்தான்..

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி, பலரும் எதிர்பார்த்தது போலவே ஒரு தலைப்பட்சமாக அமைந்தது. டாஸ் போடும்போதே கைக்குலுக்க மறுத்து ஏற்பட்ட பரபரப்பு, களத்தில் இந்தியாவின் ஒருதலைப்பட்சமான…

ind vs pak

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி, பலரும் எதிர்பார்த்தது போலவே ஒரு தலைப்பட்சமாக அமைந்தது. டாஸ் போடும்போதே கைக்குலுக்க மறுத்து ஏற்பட்ட பரபரப்பு, களத்தில் இந்தியாவின் ஒருதலைப்பட்சமான வெற்றியுடன் முடிந்தது. இந்திய அணி பாகிஸ்தானை வெறும் 127 ரன்களுக்குள் சுருட்டி, அந்த இலக்கை 25 பந்துகள் மீதமிருக்க, ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றனர். இது, டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும்.

டாஸ் போடும்போது கேப்டன் சல்மான் அலி ஆகா வீராவேசமாக பேசியது தவிர, பாகிஸ்தான் அணியின் எந்த நகர்வும் களத்தில் துணிச்சலாக இல்லை. பயந்த, உயிரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்களுக்கு, இந்திய அணி தகுந்த தண்டனை கொடுத்தது. போட்டி நடந்த நான்கு மணி நேரத்திலும், பாகிஸ்தான் ஒருமுறை கூட வெற்றிக்கு நெருக்கமாக வந்ததாக தெரியவில்லை.

பாகிஸ்தான் அணியின் அவல நிலையை, ஷாஹீன் அஃப்ரிடி என்ற டெய்ல்-எண்டர் பேட்டிங்கில் அதிக ரன் அடித்ததும், சைம் அயூப் என்ற முன்னணி பேட்ஸ்மேன் அதிக விக்கெட்கள் வீழ்த்தியதும் தெளிவாக உணர்த்தின. முதல் நிலை வீரர்கள் சோபிக்க தவறியது, உலகின் தலைசிறந்த அணியான இந்தியாவை எதிர்த்து போராட தேவையான கூட்டு முயற்சி பாகிஸ்தான் அணியில் இல்லை என்பதை காட்டுகிறது.

இந்த அபார வெற்றியின் மூலம், இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக மிகவேகமான சேஸிங்கை நிகழ்த்திய இந்திய அணி, தற்போது குரூப் ஏ பிரிவில் இரண்டு போட்டிகளில் நான்கு புள்ளிகளுடன், நல்ல ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், அவர்களது பந்துவீச்சை நம்பியிருக்கலாம். ஆனால், 160 ரன்களை எட்ட நினைத்த பேட்ஸ்மேன்கள், கிடைத்த நல்ல தொடக்கங்களை வீணடித்து, இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எளிதாக சரணடைந்தனர்.

இந்திய அணியின் தொடக்கமே நன்றாக இருந்தது. அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அதிரடி தொடக்கம் தந்தார். திலக் வர்மா (31 ரன்கள், 31 பந்துகளில்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (47 ரன்கள், 37 பந்துகளில்) ஆகியோர் பொறுமையுடனும், வியூகத்துடனும் விளையாடி, பாகிஸ்தான் அணியிடம் இல்லாத ஆட்ட உணர்வை வெளிப்படுத்தினர்.

இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமிருந்தாலும், இந்தியாவின் ஸ்பின் கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து 12 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தினர். குறிப்பாக, இடது கை மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவின் மாயாஜாலத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் முற்றிலும் திக்குத்தெரியாமல் தவித்தனர். மேலும் அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், 120 பந்துகளில் 63 டாட் பந்துகளை ஆடினர். இது, 10 ஓவர்களுக்கு மேல் ரன் எடுக்காமல் இருந்தது, இந்திய சுழற்பந்துவீச்சு கூட்டணி கொடுத்த அழுத்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மூத்த வீரர்களான சல்மான் அலி மற்றும் முகமது ஹாரிஸ் உட்பட, பெரும்பாலான பேட்ஸ்மேன்கள், ரன்களை மெதுவாகச் சேர்த்துக்கொண்டு, பெரிய ஷாட்களை அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தனர். இது, அவர்களின் மோசமான திட்டமிடலையும், மன உறுதியின்மையையும் எடுத்துக்காட்டியது.

பாகிஸ்தானின் இந்த மோசமான பேட்டிங் அணுகுமுறையை கண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம், குல்தீப் யாதவை புகழ்ந்து, பாகிஸ்தான் அணியால் குல்தீப்பை சமாளிக்க முடியவில்லை” என்று கோபத்துடன் கூறினார்.