தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என கடுமையாக விமர்சித்தார். “பா.ஜ.க. அரசு நமக்கு துரோகம் செய்கிறது என்றால், இங்கு தி.மு.க. அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.
விஜய், தி.மு.க. 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது என்றும், அதில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சில:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ரூ. 1500, ரேஷன் கடைகளில் மீண்டும் உளுந்து வழங்குதல்.
நீட் தேர்வை ரத்து செய்தல், கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புதல்.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% முன்னுரிமை, 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை வழங்குதல்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல், பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம், அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்களுக்கு அரசுப் பணி உறுதி, தூய்மைப் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்றுதல்.
மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல், 2 லட்சம் வீடுகள் கட்டித் தருதல், மீன் உலர்த்தும் தளங்களை அமைத்தல்.
டீசல் விலையில் ரூ. 3 குறைத்தல், எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்குதல்.
மேற்கண்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று திமுக பொய் சொல்லி நம்பிக்கை மோசடி செய்துள்ளது என்று விஜய் பேசினார்.
மேலும் விஜய் அரியலூர் மாவட்டத்தின் நீண்டகால பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டினார். அரியலூர் தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களில் ஒன்றாக இருந்தும், சிமெண்ட் மற்றும் முந்திரித் தொழில்களை மேம்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல்.
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைப் முறையாக பராமரித்தல்.
ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைத்தல்.
அரியலூரிலிருந்து ஜெயங்கொண்டான், காட்டுமன்னார்கோயில் வழியாகச் சிதம்பரம் மற்றும் கும்பகோணத்துக்கு ரயில்வே வழித்தடம் அமைத்தல்.
முந்திரி தொழிற்சாலை அமைத்தல்.
போதுமான பேருந்து வசதிகளை ஏற்படுத்துதல்.
மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விஜய் கேட்டு கொண்டர்.
மேலும் “நமது த.வெ.க.வின் ஒரே நோக்கம் தீர்வுகளைக் கண்டறிவதுதான்,” என்று அவர் கூறினார். “நமது தேர்தல் அறிக்கையில் அனைத்துக்கோரிக்கைகளுக்கும் தெளிவான தீர்வுகள் இருக்கும். எது சாத்தியமோ, எது உண்மையோ அதை மட்டுமே வாக்குறுதிகளாக வழங்குவோம். நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை ஒருபோதும் கொடுக்க மாட்டோம்,” என்றார்.
அத்துடன், அடிப்படை வசதிகளான மருத்துவம், குடிநீர், ரேஷன், கல்வி, சாலை, மின்சாரம், மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் எந்தவித சமரசமும் இருக்காது என்று அவர் உறுதியளித்தார்.
விஜய்யின் தொலைநோக்கு பார்வைகளில் சில:
ஏழ்மை மற்றும் வறுமையற்ற தமிழகம்.
குடும்ப ஆதிக்கமற்ற தமிழகம்.
ஊழலற்ற தமிழகம்.
மனசாட்சியுடன் கூடிய உண்மையான மக்களாட்சி.
விஜய்யின் பேச்சு, தி.மு.க.வுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
