தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளான இன்று, திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டோல்கேட் பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். விஜய்யின் பிரசார வாகனம் அப்பகுதியை கடந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலே இந்த பாதிப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பிரசாரப் பயணம், திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தொண்டர்களின் பெரும் கூட்டத்திற்கு இடையே ஊர்ந்து செல்லும் காட்சிகளும், அந்த பயணத்தின்போது ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்புகளும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், விஜய்யின் அரசியல் நகர்வை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
“கொள்கையில்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டம் அல்ல தி.மு.க.” என்று கூறிய ஸ்டாலின், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் தி.மு.க. அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
“பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என்று அவர் கூறியிருப்பது, விஜய்யின் அரசியல் வருகை ஒரு சவாலாக கருதப்படுவதை உறுதிப்படுத்துகிறது. ஸ்டாலினின் இந்த அறிக்கை, முதல் நாளிலேயே தி.மு.க., விஜய்யை ஒரு அரசியல் போட்டியாளராக பார்க்கத் தொடங்கியுள்ளதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் இந்த பிரசாரப் பயணம், தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளின் எதிர்வினைகளும், தொண்டர்களின் ஆரவாரமும், வரவிருக்கும் தேர்தலின் பரபரப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த வார பிரச்சாரம் நாகப்பட்டினத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், த.வெ.க. கேட்ட இடத்தில் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே தி.மு.க. அதே பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி பெற்றிருந்ததால், விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. இது, ஆளும் கட்சிக்கும், புதிதாக அரசியல் களம் காணும் விஜய்க்கும் இடையேயான போட்டி உணர்வை வெளிப்படுத்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
