மீண்டும் சேட்டை செய்யும் குருமூர்த்தி – அண்ணாமலை.. அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க முயற்சியா? உடைந்தாலும் நல்லது தான்.. விஜய்யுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் ஒரே கல்லில் 2 மாங்காய்கள்.. திமுகவையும் வீழ்த்திவிடலாம், பாஜகவையும் நோட்டாவுக்கு கீழ் தள்ளிவிடலாம்..!

மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தி, பெடரல் என்ற பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை பதவி விலகியது, அவரது ‘வேகமான செயல்பாடுகள்’ காரணமாகத்தான் என்று கூறினார். மேலும், பா.ஜ.க.வின் வளர்ச்சி படிப்படியாக…

gurumurthi

மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தி, பெடரல் என்ற பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை பதவி விலகியது, அவரது ‘வேகமான செயல்பாடுகள்’ காரணமாகத்தான் என்று கூறினார். மேலும், பா.ஜ.க.வின் வளர்ச்சி படிப்படியாக இருக்க வேண்டும் என்று கட்சி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு கட்சி வேகமாக வளர்ந்தால் நல்லது தானே, வேகமாக வளர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவரை எந்த கட்சியாவது ஒதுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குருமூர்த்தி ஒரு ‘சர்ச்சைக்குரிய’ நபர் என பலரால் விமர்சிக்கப்படுகிறார். அவரது கடந்தகால கணிப்புகள் பலவும் தவறாகவே இருந்திருக்கின்றன. குறிப்பாக, ஓ.பி.எஸ்.ஸின் தர்மயுத்தத்தை ஆதரித்து அவரை அரசியல் களத்தில் தனிமைப்படுத்தியதில் குருமூர்த்திக்கு முக்கிய பங்கு உண்டு.

இதே குருமூர்த்தி, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி, அ.தி.மு.க. கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தமிழக கூட்டணியின் முகமாக அண்ணாமலை இருப்பார் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது, அண்ணாமலையின் பதவி விலகலுக்கு, அவரது ‘வேகமான செயல்பாடுகள்’ காரணம் என்று கூறுவது, அவரின் முந்தைய நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளது. இது, அ.தி.மு.க. கூட்டணியை கலைப்பதற்கான ஒரு முயற்சி என்று கூறப்படுகிறது.

அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது, அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்தார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. பா.ஜ.க.வை தனிப்பட்ட முறையில் வளர்க்கும் நோக்கம் சரியானது என்றாலும் கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக விமர்சித்து, அ.தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்தினார். அது அதிமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி கூட்டணியில் இருந்து விலக நேரிட்டது.

இந்த நிலையில் தற்போது ‘என்.டி.ஏ.’ கூட்டணியின் தமிழக பிரசாரத்தின் முகமாக அண்ணாமலை இருப்பார் என்று குருமூர்த்தி சொன்னது, கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவமதிப்பதாக அ.தி.மு.க. கருதுகிறது.

கூட்டணிக்கு எதிரான அண்ணாமலையின் நடவடிக்கைகள், தி.மு.க.வுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது. குருமூர்த்தி, தற்போது அண்ணாமலையை ஆதரித்து, அவரது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால், அண்ணாமலையின் நடவடிக்கைகள், குறிப்பாக அ.தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்தியது, பா.ஜ.க.வில் உள்ள பலருக்கும் தாமதமாகவே புரிந்தது. அதனால் தான் தற்போது அவர் தேசிய தலைமையால் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. பாஜகவுடன் கூட்டணியில் இல்லாமல், விஜய் மற்றும் அ.தி.மு.க. இணைந்தால், தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், பாஜக அதற்கு சம்மதிக்குமா? என்று தெரியவில்லை. பா.ஜ.க.வுடன் இருக்கும்வரை, அ.தி.மு.க. வலுவிழந்து கொண்டே இருக்கும். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டாலும்கூட, அவர்களை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளது. இது, பா.ஜ.க.வின் மறைமுகமான தலையீட்டை காட்டுகிறது.

குருமூர்த்தி போன்றோர், தங்கள் பேட்டிகள் மூலம் பா.ஜ.க.வின் உள்நோக்கங்களை வெளிப்படுத்துகிறார்கள். அண்ணாமலை மற்றும் குருமூர்த்தியின் கருத்துக்கள், அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவதையும், அதன் மூலம் தி.மு.க.வுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டதாக தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அண்ணாமலையை திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று சிலர் கூறியதுபோல், குருமூர்த்தியையும் அந்த லிஸ்ட்டில் சேர்ப்பார்களா? என தெரியவில்லை.

அரசியல் மேதாவிகள் போல் பேசும் அண்ணாமலை, குருமூர்த்தி போன்றோர் பேச்சை கேட்காமல், அதிமுக தனது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு விஜய்யுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே கட்சியையும் காப்பாற்ற முடியும், ஆட்சியையும் பிடிக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.