இன்றைய டிஜிட்டல் உலகில், சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளுக்கும் கூட PIN எண்ணை உள்ளிடுவது பலருக்கு ஒரு சிரமமான பணியாக உள்ளது. தேநீர், சிற்றுண்டி அல்லது மெட்ரோ பயணம் போன்ற அன்றாட செலவுகளுக்கு ஒவ்வொரு முறையும் PIN நுழைக்க வேண்டிய அவசியத்தை நீக்க, யுபிஐ லைட் (UPI Lite) என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யுபிஐ லைட் என்றால் என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். யுபிஐ லைட் என்பது யுபிஐ (UPI) தளத்தில் உள்ள ஒரு புதிய அம்சமாகும். இதன் முக்கிய நோக்கம், ரூ.1000-க்கு கீழுள்ள சிறிய தொகை பரிவர்த்தனைகளை PIN இல்லாமல் விரைவாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்வதாகும்.
யுபிஐ லைட் எப்படி செயல்படுகிறது என்றால் ஒரே முறை டாப் அப் (Top-up)செய்து பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து யுபிஐ லைட் வாலட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து கொள்ளலாம்.அதன்பின் சிறிய பரிவர்த்தனைகளை PIN இல்லாமல், எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம். இந்த அம்சம், அன்றாட சிறு செலவுகளுக்கு மிகவும் பொருத்தமானது.
PIN உள்ளிட தேவையில்லை என்பதால், பரிவர்த்தனைகள் மிக வேகமாக முடிவடைகின்றன. PIN உள்ளிடாததால், PIN கசிவுக்கான வாய்ப்புகள் குறைகின்றன. நெட்வொர்க் குறைவாக இருந்தாலும் பரிவர்த்தனை செய்ய முடியும், ஏனெனில் இது ஆஃப்லைன் முறையில் செயல்படும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்களிடையே மேலும் எளிமையாக்கி, பணமில்லா பொருளாதாரத்தை மேம்படுத்த இது உதவுகிறது. யுபிஐ லைட், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தினசரி வாழ்க்கையில் மேலும் எளிதாக்கி, அனைவருக்கும் ஒரு வசதியான அனுபவத்தை வழங்குகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
