2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்தே சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டிருக்கும் நிலையில் கூட்டணியை அவர் மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக கூட்டணியில் இணைந்த பின்னர் ஒரு கட்சி கூட கூட்டணிக்கு வரவில்லை என்பதோடு, பாஜகவுடன் தொடர்ந்து இருந்தால், அது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று அவர் கருதுவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து அவர் “மாற்றி யோசிப்பதாக” அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே, அதிமுகவின் உட்கட்சிப் பூசலில் பாஜக தலையிடுவதாக ஈபிஎஸ் அதிருப்தியில் இருந்துள்ளார். ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் போன்றோரை மீண்டும் கட்சியில் சேர்க்க பாஜக முயன்றது, ஈபிஎஸ்-ன் தலைமைக்கு சவாலாக அமைந்தது.
பாஜக கூட்டணியில் அதிமுகவே பெரிய அண்ணன் கட்சி என்று ஈபிஎஸ் பலமுறை வலியுறுத்திய போதிலும், மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட சில பாஜக தலைவர்களின் செயல்பாடுகள் கூட்டணியில் உள்ள மரியாதைக்குறைவை காட்டுவதாக அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.
பாஜகவுடனான கூட்டணி, சிறுபான்மையினர் மற்றும் மாற்று சமூகங்களின் வாக்குகளை வெகுவாக பாதிக்கும் என்று அதிமுக தலைமை அஞ்சுகிறது. 2024 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டபோதிலும், கணிசமான வாக்குகளை பெற்றது, அதிமுக தனித்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒருவேளை தோல்வியடைந்தால், ஈபிஎஸ்-ன் தலைமைக்கு மிகப்பெரிய அடியாக அது அமையும். ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால், அது பல நன்மைகளை கொடுக்கும் என்று அதிமுக தலைமை கருதுகிறது.
நடிகர் விஜய்க்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சியாக மாறியுள்ளதால், இது ஒரு பெரும் வாக்கு வங்கியாக மாறும் என அதிமுக நம்புகிறது.
விஜய்யின் பிரசாரம் இளைஞர்களை அதிக அளவில் கவரும் ஆற்றல் கொண்டது. திமுகவின் இளைஞரணிக்கு இணையாக, இவர்களின் பலம் கூட்டணிக்கு உதவும்.
விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், அவர் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார். ஆனால், இந்த கூட்டணியில் ஈபிஎஸ்-க்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகம். பாஜகவுடன் இணைந்து தோல்வியுற்று ஆட்சியையும் பிடிக்க முடியாமல், உட்கட்சியிலும் குழப்பம் ஏற்பட்டால் ஈபிஎஸ் நிலைமை மோசமாகிவிடும், அதற்கு விஜய்யுடன் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்று கொள்வது மேல் என்று அவரது எண்ணம் செல்வதாக கூறப்படுகிறது.
இந்த கருத்தின் பின்னணியில், திமுகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது அவசியம் என்று ஈபிஎஸ் கருதுவதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் தோல்வியடைந்து கட்சியை பலவீனப்படுத்துவதைவிட, புதிய இளைஞர் சக்தியுடன் இணைந்து ஆட்சியை பிடிப்பது லாபகரமானதாக இருக்கும் என்பது ஈபிஎஸ்-ன் சிந்தனையாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
